அரசு விண்வெளி தொழில் கொள்கை ஒப்புதல் அளித்தும் வெளியாக தாமதம் ஏன்?
சென்னை:விண்வெளி துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, விண்வெளி தொழில் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்து இரு வாரங்களாகியும், இன்னும் அந்த கொள்கை வெளியிடப்படவில்லை.இந்த துறையில் முதலீட்டை ஈர்க்க, குஜராத் முழுவீச்சில் ஈடுபட்டு வருவதால், விண்வெளி கொள்கையை விரைந்து வெளியிட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழகத்தில் விண்வெளி துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, ஊக்குவிப்பு சலுகைகள் அடங்கிய விண்வெளி தொழில் கொள்கையை, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் தயாரித்து உள்ளது. இதன் வாயிலாக, 10,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கவும், 10,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த கொள்கைக்கு கடந்த மாதம், 17ம் தேதி, தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதை கூட்டம் முடிந்ததும், தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார்.இந்த கொள்கைக்கான வரைவு அறிக்கையை தமிழகம் வெளியிட்ட பின், குஜராத்தும் அதேபோன்ற அறிக்கை வெளியிட்டது. பின், தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்த அன்று, குஜராத் அரசு விண்வெளி தொழில் கொள்கையை வெளியிட்டது. தமிழகத்தை பார்த்து குஜராத் காப்பி அடித்ததாக அமைச்சர் ராஜா கருத்து தெரிவித்திருந்த நிலையில், அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்து இரு வாரங்கள் ஆகியும், விண்வெளி கொள்கை வெளியிடப்படவில்லை. இதுகுறித்து, தொழில் துறையினர் கூறியதாவது:குஜராத் விண்வெளி தொழில் கொள்கையை வெளியிட்ட நிலையில், அதில் உள்ள ஊக்குவிப்பு சலுகைகளை தெரிவித்து, முதலீடுகளை ஈர்க்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.ஆனால், தமிழகத்தில் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட கொள்கையை வெளியிட தாமதமாகிறது. குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தால், தமிழகத்தில் முதலீடு வர அதிக வாய்ப்புள்ளது. எனவே, விண்வெளி நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, அரசு, விரைந்து அதற்கான தொழில் கொள்கையை வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைந்து விட்டதால், விரைவில் விண்வெளி தொழில் கொள்கை வெளியிடப்படும்,'' என்றார். சுருக்கம்: விண்வெளி தொழில் கொள்கையை, தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோ தயாரித்துள்ளது. இதன் வாயிலாக 10,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கவும்; 10,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. ஏப்ரல் 17ல், தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டது. குஜராத் அரசு இதே போன்ற அறிக்கை வெளியிட்ட பிறகும், தமிழகத்தில் கொள்கை வெளியிட தாமதம்.