| ADDED : ஜன 22, 2024 12:49 AM
இந்திய பெரு நகரங்களில் வசிக்கும் பணிக்கு செல்லும் பெண்கள், சுயேச்சையாக நிதி முடிவு எடுக்கும் ஆற்றலும், திறனும் பெற்றிருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.இந்தியாவில் நகர்ப்புற பெண்களின் நிதி திட்டமிடல் குறித்து அறிந்து கொள்வதற்காக டி.பி.எஸ்., வங்கி, கிரிசில் அமைப்புடன் இணைந்து, 'பெண்களும் நிதியும்' எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டது. பெருநகரங்களில் வசிக்கும் வருமானம் ஈட்டும் பெண்களில் 47 சதவீதம் பேர் சுயேச்சையாக நிதி முடிவுகள் எடுப்பது, இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.மேலும் வருமானம் ஈட்டும் பெண்களில் பெரும்பாலானோர் நீண்ட கால குடும்ப முடிவுகளில் தீவிரமாக பங்கேற்பதும், குழந்தைகள் கல்வி, ஓய்வு கால திட்டமிடல் ஆகியவற்றுக்கு இவர்கள் முக்கியத்துவம் அளிப்பதும் தெரிய வந்துள்ளது.பணியாற்றும் பெண்களில், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் குடும்பத்தில் முக்கிய முடிவு எடுப்பவர்களாக இருப்பதும், பெண்கள் மத்தியில் அதிகம் நாடப்படும் முதலீடாக வைப்பு நிதி இருப்பதும் தெரியவந்துள்ளது.டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறையை பயன்படுத்துவதிலும் பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இளம் பெண்களில் அதிகம் பேர், யு.பி.ஐ., மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை வசதியை நாடுகின்றனர்.