| ADDED : செப் 21, 2011 12:27 AM
திருவனந்தபுரம்:'கேரள மாநிலத்திற்கென தனி ரயில்வே மண்டலம் அமைக்க முடியாது. கன்னியாகுமரி - திருவனந்தபுரம் அகல ரயில் பாதை வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் மின்மயமாக்கப்படும். தமிழக - கேரள எல்லையில் கஞ்சிக்கோட்டில் புதிய ரயில் பெட்டித் தொழிற்சாலைக்கு அக்டோபர் 22ம் தேதி அடிக்கல் நாட்டப்படும்' என, மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திவேதி தெரிவித்தார்.கேரள மாநிலத்தில் நிறைவேற்றப்பட உள்ள பல்வேறு ரயில்வே திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, மத்திய ரயில்வே துறை அமைச்சர் தினேஷ் திவேதி நேற்று திருவனந்தபுரம் வந்தார்.
அங்கு அவர், முதல்வர் உம்மன் சாண்டி, ரயில்வே அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.கூட்டத்திற்கு பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'கேரளாவில் ரயில்வே வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கன்னியாகுமரி - திருவனந்தபுரம் அகல ரயில் பாதை மின்மயமாக்கும் திட்டம் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் முடிக்கப்படும். கேரளாவுக்கென தனி ரயில்வே மண்டலம் அமைக்க இயலாது.திருவனந்தபுரம் - காசர்கோடு இடையே அதிவேக ரயில் பாதை அமைப்பதற்கான திட்டம் குறித்தும், அதில் ரயில்வே துறையின் பங்களிப்பு குறித்தும் பரிசீலிக்கப்படும்.
கஞ்சிக்கோடு பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா, அக்டோபர் மாதம் 22ம் தேதி நடைபெறும்.கேரள மாநிலத்தின் ரயில்வே திட்டங்களை செயல்படுத்த வசதியாக முதன்மை நிர்வாகி பதவி உருவாக்கப்படும்.பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பாலக்காடு - மங்களூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், நிலம்பூர் - திருவனந்தபுரம் ராஜா ராணி எக்ஸ்பிரஸ் ஆகியவை அக்டோபர் மாதம் இயக்கப்படும்' என்றார்.