மும்பை,மஹாராஷ்டிராவின் மும்பையில், 24 மணி நேரத்தில் 20 செ.மீ., மழை பெய்ததை அடுத்து, விமானம் மற்றும் ரயில் சேவை பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது.மஹாராஷ்டிராவின் மும்பையில் இரு வாரங்களாக மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில், கடந்த 20ம் தேதி இரவு துவங்கிய மழை, நேற்று காலை வரை கொட்டி தீர்த்தது.கடும் அவதிமும்பை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 21ம் தேதி காலை துவங்கி, நேற்று காலை 8:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 20 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ட்ராம்பேவில் 24 செ.மீ., மழை பதிவானது. நுதன் வித்யாமந்திர், நட்கர்னி பூங்காவில் 22 செ.மீ., மழை பெய்ததாக கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், பாண்டூபில் 21 செ.மீ., பதிவானதாக தெரிவித்துள்ளது.இடைவிடாமல் கொட்டிய மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. குடியிருப்புகள், பூங்காக்களில் மழைநீர் சூழ்ந்ததால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது.இருப்பினும், கனமழையால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரு சக்கர வாகனங்கள் பழுதானதால், பல இடங்களில் வாகன ஓட்டிகள் அவற்றை தள்ளிச் செல்லும் நிலை காணப்பட்டது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பல இடங்களில் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது.அந்தேரி மற்றும் கார்ரோடு சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் அவை இரண்டும் மூடப்பட்டன. மும்பை விமான நிலைய ஓடுபாதைகளில் தண்ணீர் தேங்கியதாலும், வெளிச்சம் குறைவாக இருந்ததாலும் 30க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மும்பை வந்த விமானங்களும் அருகில் உள்ள நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.வெள்ளம் காரணமாக மும்பை புறநகர் ரயில் சேவை முடங்கியது. இருப்புப் பாதையில் மழைநீர் தேங்கியதால் கல்யாண் - தாகுர்லி நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மீட்புப் பணிஒரு சில இடங்களில் ரயில்கள் நிறுத்தப்பட்டதால், மக்கள் கூட்டம் கூட்டமாக இருப்புப் பாதைகளில் இறங்கி நடந்து சென்றனர்.தண்ணீர் அகற்றப்பட்டதை அடுத்து பெரும்பாலான பகுதிகளில் நேற்று காலை முதல் ரயில் சேவை சீரானது. இருப்பினும், ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக புகார் எழுந்தது. நவி மும்பை பேலாப்பூர் மலைப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியை காண சென்ற சுற்றுலா பயணியர் 60 பேர், திரும்பி வரும் வழியில் மழை வெள்ளத்தில் சிக்கினர். அவர்களை போலீசாரும், தீயணைப்பு துறையினரும் கயிறுகட்டி பத்திரமாக மீட்டனர். மும்பையில் விட்டுவிட்டு மழை பெய்து வரும் சூழலில், இன்றும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இதையடுத்து, மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.