பெங்களூரு: வேட்டி, தலைப்பாகை அணிந்து வந்த விவசாயிக்கு அனுமதி மறுத்த பெங்களூரில் உள்ள வணிக வளாகமான ஷாப்பிங் மாலுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் பூட்டு போட்டு, 'சீல்' வைத்தனர்.கர்நாடக மாநிலம் பெங்களூரின் மாகடி ரோட்டில் ஜி.டி., மால் உள்ளது. இங்கு கடந்த 16ம் தேதி, ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த பக்கீரப்பா, 65, என்ற விவசாயி, தன் மகன் நாகராஜ், 33, உடன், கல்கி திரைப்படம் பார்க்க வந்தார்.பக்கீரப்பா வேட்டி அணிந்திருந்ததுடன், தலைப்பாகையும் கட்டியிருந்தார். மாலின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி ஒருவர், 'வேட்டி அணிந்து வந்தால் மாலுக்குள் அனுமதிக்க மாட்டோம்' என்று கூறினார்.இதனால், பக்கீரப்பாவின் மகன் நாகராஜ், காவலாளியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை சிலர் மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். தகவல் அறிந்த ஊடகத்தினர் அங்கு சென்றதால், பக்கீரப்பாவை மாலுக்குள் காவலாளி அனுமதித்தார்.ஆனாலும், விவசாயியை மால் நிர்வாகம் அவமதித்து விட்டதாகக் கூறி, மாலின் முன் 17ம் தேதி, கன்னட அமைப்பினர் பக்கீரப்பாவுடன் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சமாதானம் பேசிய மாலின் பொறுப்பாளர் சிவகுமார், நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு, பக்கீரப்பாவுக்கு மாலை அணிவித்து கவுரவித்தார்.இந்நிலையில், கர்நாடக சட்டசபை கூட்டத் தொடரிலும் நேற்று இப்பிரச்னை எதிரொலித்தது.விவசாயியை அவமதித்த மால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் வலியுறுத்தினர்.காங்., - சரணகவுடா கந்தகூர்: வர்த்தக வளாக செக்யூரிட்டி ஏஜென்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் மஹாதேவப்பா: இது தொடர்பாக அறிக்கை பெற்று நடவடிக்கை எடுப்போம்.காங்., - லட்சுமண் சவதி: அறிக்கை பெற்று என்ன நடவடிக்கை எடுப்பீர்கள். அமைச்சராக இருந்து கொண்டு இப்படி பேசாதீர்கள். இது விவசாயி சம்பந்தப்பட்ட விஷயம்; தீவிரமாக கருதுங்கள். மாலுக்கு ஒரு வாரம் மின் இணைப்பை துண்டியுங்கள்.சபாநாயகர் காதர்: அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை தெளிவுபடுத்துங்கள்.அமைச்சர் பைரதி சுரேஷ்: ஏற்கனவே பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனருடன் ஆலோசித்தேன். ஏழு நாட்கள் ஜி.டி.மால் மூடப்படும். இதற்கு சட்டத்தில் இடம் உள்ளது.இவ்வாறு விவாதம் நடந்தது.இதையடுத்து, நேற்று மதியம் மாலுக்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள், அங்கிருந்த மக்களை வெளியேற்றி விட்டு, மாலுக்கு பூட்டு போட்டு சீல் வைத்தனர்.இதற்கிடையில், ஜி.டி.மால், இரண்டு ஆண்டாக சொத்து வரி பாக்கி வைத்திருப்பது தெரிந்தது. வரியை செலுத்தும்படியும் நிர்வாகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.