சிக்கபல்லாபூர்:சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் நந்தி மலை அமைந்துள்ளது. வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் பெங்களூரு உட்பட பல மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணியர் இங்கு சென்று, சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசிப்பர். இங்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால், மலையின் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பலரும் பாதியில் திரும்பி விடுகின்றனர்.இதைத் தவிர்க்கும் வகையில், அடிவாரத்தில் இருந்து மலையின் உச்சிக்கு, 'ரோப்வே' திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டது. இதற்கான டெண்டர் அறிவித்த கர்நாடகா சுற்றுலா துறை, 'டைனமிக்ஸ் ரோப்வே பிரைவேட் லிமிடெட்'டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.நந்தி மலையில், 115 கோடி ரூபாய் செலவில், பி.பி.பி., எனும் அரசு தனியார் கூட்டுடன், 3 கி.மீ., துாரத்துக்கு ரோப்வே அமைக்கப்படும். இப்பணி முடிந்தால், அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு 12 முதல் 15 நிமிடங்களில் சென்றடையலாம்.இதற்காக, 50 ரோப்வே பெட்டிகள் அடிவாரத்தில் இருந்து உச்சிக்கும்; உச்சியில் இருந்து அடிவாரத்திற்கு, 50 ரோப்வே பெட்டிகளும் பொருத்தப்படும். ஒரு ரோப்வே பெட்டியில் ஆறு பேர் வரை அமரலாம். ஒரு மணி நேரத்தில் சராசரியாக 1,000 பேர் ஏற்றிச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.இந்த திட்டத்திற்காக, 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இப்பகுதியில் ஹோட்டல், தங்கும் வசதி தவிர, வாகனங்கள் நிறுத்துமிடம், ஏ.டி.எம்., குடிநீர் மையம், கழிப்பறை, டிக்கெட் கவுன்டர், டீ, காபி கடைகள் அமைக்கப்பட உள்ளன.