பாகல்கோட்:''தார்வாட்டிற்குள் என்னை நுழைய விடாமல் செய்கின்றனர். நான் என்ன பயங்கரவாதியா,'' என்று, காங்கிரஸ் செயல் தலைவர் வினய் குல்கர்னி கொந்தளித்து உள்ளார்.தார்வாட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் செயல் தலைவருமான வினய் குல்கர்னி, பாகல்கோட்டில் அளித்த பேட்டி:லோக்சபா தேர்தலில் தார்வாட் தொகுதியில், மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு எதிராக, போட்டியிட போவதாக லிங்காயத் சமூக மடாதிபதி திங்களேஸ்வரா சுவாமி அறிவித்து உள்ளார். அவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. லிங்காயத் சமூக மக்களை, பிரஹலாத் ஜோஷி அடக்குவது உண்மை தான்.சட்டசபை தேர்தலில் ஜெகதீஷ் ஷெட்டருக்கு 'சீட்' கிடைக்காமல் போனதற்கு, பிரஹலாத் ஜோஷி தான் காரணம். லிங்காயத் மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதி குறித்து, பா.ஜ.,வில் இருக்கும் லிங்காயத் சமூக தலைவர்கள், ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எங்கள் சமூக பிரச்னைக்காக குரல் கொடுக்க, திங்களேஸ்வரா சுவாமி வந்து உள்ளார். அவர் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் அவருடன் இருப்போம். தார்வாட் காங்கிரஸ் வேட்பாளர் வினோத் அசூட்டி இளைஞர்; அவருக்கு ஆதரவாக இருக்கிறோம்.திங்களேஸ்வரா சுவாமிக்கு காங்கிரஸ் ஆதரவு தர வேண்டும் என்று, கோரிக்கை எழுந்து உள்ளது. இதுபற்றி எங்கள் கட்சி மேலிடம் முடிவு செய்யும்.கொலை வழக்கில் பத்து மாதம், பெலகாவி ஹிண்டல்கா சிறையில் இருந்தேன். என்னை தனி அறையில் அடைத்து, யாருடனும் பேசவிடாமல் செய்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னரும், தார்வாட் செல்ல விடாமல் தடுத்தனர். ஆனாலும் சட்டசபை தேர்தலில், தார்வாட் மக்கள் என்னை வெற்றி பெற வைத்து, எம்.எல்.ஏ., ஆக்கி உள்ளனர். எனது தொகுதி மக்களுக்கு, நான் ஏதாவது செய்ய நினைத்தாலும், மாவட்ட எல்லையில் நின்று தான் செய்ய வேண்டி உள்ளது.நான் என்ன பயங்கரவாதியா. தார்வாடில் 2,000 மாடுகள், 5,000 ஆடுகள் வளர்க்கிறேன். அதை பராமரிக்க வேண்டி உள்ளது.சிறையில் இருக்கும் போது, எனது மாடுகளில் இருந்து கறக்கப்படும் பாலை வாங்க கூடாது என்று, பால் கூட்டுறவு சங்கங்களுக்கு, பா.ஜ.,வினர் தொல்லை கொடுத்து உள்ளனர். கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் கூட்டமைப்பு சங்கத்தில் கூட, எனது மாடுகளின் பாலை வாங்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.