பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தவர் மீது தாக்குதல்?
ராம்நகர்: பெங்களூரு ரூரல் பா.ஜ., வேட்பாளர் மஞ்சுநாத்துக்கு ஆதரவாக, பிரசாரம் செய்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.பெங்களூரு ரூரலில் பா.ஜ., வேட்பாளராக, டாக்டர் மஞ்சுநாத் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக பா.ஜ., - ம.ஜ.த., தொண்டர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். இரு கட்சி தொண்டர்களை குறிவைத்து, காங்கிரஸ் தொண்டர்கள் தாக்குவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.மஞ்சுநாத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்த, கெம்பனஹள்ளி கிராம பஞ்சாயத்து உறுப்பினர் மஞ்சுநாத், பா.ஜ., பிரமுகர் நவீன் என்பவர் தாக்கப்பட்டனர்.இந்நிலையில், பெங்களூரு ககலிபூர் அருகே கிரிகவுடனதொட்டி கிராமத்தில் வசிக்கும் மஹாதேவ், 32 என்பவரை, நேற்று முன்தினம் இரவு ஒரு கும்பல் தாக்கி விட்டு தப்பியது. படுகாயம் அடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். மஹாதேவ், பா.ஜ., வேட்பாளர் மஞ்சுநாத்தை ஆதரித்து, பிரசாரம் செய்து வந்தார். இதனால் அவரை காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கியதாக, குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.ககலிபூர் போலீசார் விசாரிக்கின்றனர்.