உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போர்க்கொடி!மஹாராஷ்டிரா காங்.,கில் வெடித்தது உட்கட்சி பூசல்: முஸ்லிம் ஓட்டு வேண்டும்; வேட்பாளர் வேண்டாமா?

போர்க்கொடி!மஹாராஷ்டிரா காங்.,கில் வெடித்தது உட்கட்சி பூசல்: முஸ்லிம் ஓட்டு வேண்டும்; வேட்பாளர் வேண்டாமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிரா லோக்சபா தேர்தலில் ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட நிறுத்தாத காங்கிரஸ் தலைமையிலான மஹா விகாஸ் அகாடியின் முடிவால் அதிருப்தி அடைந்த காங்., மூத்த தலைவர் முஹமது ஆரிப் நசீம் கான், கட்சியின் பிரசார குழுவிலிருந்து விலகுவதாக அறிவித்து போர்க்கொடி துாக்கியுள்ளார். இதனால், மஹாராஷ்டிரா காங்கிரசில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ., மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள 48 லோக்சபா தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று முன்தினமும் நடந்து முடிந்தது. ராய்காட், பாராமதி, ஒஸ்மனாபாத் உள்ளிட்ட 11 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 7ல் தேர்தல் நடக்கவுள்ளது.

வாய்ப்பு

தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய சமாஜ் பக் ஷா ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. எதிர்க்கட்சியான மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ், உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே - சிவசேனா, தேசியவாத காங்., சரத் சந்திர பவார் கட்சி ஆகியவை களமிறங்குகின்றன. இந்நிலையில், இங்கு உள்ள காங்கிரசின் மூத்த தலைவரும், நட்சத்திர பேச்சாளருமான முஹமது ஆரிப் நசீம் கான், அக்கட்சிக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ளார். காங்கிரஸ் நட்சத்திர பிரசாரக் குழுவில் இடம்பெற்றிருந்த அவர், அதிலிருந்து விலகுவதாக கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்ய வாய்ப்பு வழங்கிய கட்சி தலைமைக்கு நன்றி. ஆனால், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக இந்த தேர்தலில் பிரசாரம் செய்ய மாட்டேன். அதற்கு மிக முக்கிய காரணமே, இந்த தேர்தலில் மஹாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட முஸ்லிம் வேட்பாளரை காங்கிரஸ் நிறுத்தாததுதான். மஹாராஷ்டிராவில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய நண்பர்கள் என்னை கேள்வி கேட்கின்றனர்.

எதிர்ப்பார்ப்பு

'காங்கிரசுக்கு முஸ்லிம் ஓட்டுகள் மட்டும் வேண்டும்; முஸ்லிம் வேட்பாளர்கள் வேண்டாமா?' என அவர்கள் கேட்கும் கேள்வியால் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளேன். எனவே, இந்த தேர்தலில் பிரசாரம் செய்ய முடியாது என தெரிவித்து கொள்வதுடன், பிரசார கமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளரிடம் ஆரிப் கான் கூறுகையில், ''காங்கிரஸ் தன் உண்மையான கொள்கை மற்றும் சித்தாந்தத்தில் இருந்து சமீபகாலமாக விலகி வருகிறது.''பிற சமூக மக்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய கட்சி, முஸ்லிம் சமூகத்துக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை. இஸ்லாமிய நண்பர்கள் மற்றும் அமைப்பினரின் கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை,'' என்றார். மும்பை வடக்கு மத்திய தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஆரிப் கான் நிறுத்தப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு வர்ஷா கெய்க்வாடுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மிகவும் எதிர்ப்பார்ப்புடன் இருந்த அவரால், இந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனாலேயே பிரசாரத்தில் ஈடுபட மறுப்பதாக காங்., தரப்பில் கூறப்படுகிறது. இன்னும் மூன்று கட்ட லோக்சபா தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், காங்கிரசில் துவங்கியுள்ள உட்கட்சி பூசல் மஹாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்புசாமி
ஏப் 28, 2024 09:08

முஸ்லிம் வேட்பாளர்களுக்கு ஓட்டு விழாது கோவாலு.


கண்ணன்
ஏப் 28, 2024 07:34

சட்டங்கள் கிழிய ஆரம்பித்துவிட்டன இனி கடைகளுக்குக் கொண்டாட்டம்தான்!


sankaranarayanan
ஏப் 28, 2024 01:06

மஹாராஷ்டிராவில் காங்கிரசுக்கு ஸமாப்த்தம் இனி அங்கே காங்கிரசு கைகழுவ வேண்டும் உதவா தாக்கரே சிவசேனா கட்சிக்கும் அதே கதிதானய்யா


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை