பெங்களூரு ஊரகப்பகுதிகளில் வாங்கிக்குவித்துள்ள தங்கள் சொத்துக்களின் மதிப்பு உயர்வதற்காக, பெங்களூரு மாநகராட்சியுடன் அந்த பகுதிகளை இணைக்க ஆட்சியாளர்கள் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பெங்களூரு மாநகராட்சியில், கடந்த 2009க்கு முன்பு, 98 வார்டுகள் இருந்தன. வார்டு மறு சீரமைப்புக்கு பின், வார்டுகளின் எண்ணிக்கை 198 ஆக உயர்த்தப்பட்டது.மாநகராட்சியின் பெயர் 'பிருகத் பெங்களூரு மகாநகர பாலிகே' என்று பெயர் மாற்றப்பட்டது. 2020ல் பா.ஜ., ஆட்சியில் வார்டுகளின் எண்ணிக்கை மேலும் உயர்த்தப்பட்டது. 243 ஆனது. இதில் நிறைய குளறுபடிகள் இருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. வார்டுகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.கடந்த 2020க்கு பின்பு, பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் இன்றி மாநகராட்சி இயங்குகிறது. மாநகராட்சியை நிர்வகிக்க ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டார். குழு அமைப்பு
கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், மாநகராட்சி வார்டுகள் எண்ணிக்கையை 243ல் இருந்து 225 ஆக குறைத்தது. கடந்த ஆண்டு டிசம்பரிலேயே பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தப்படும் என்றும் காங்கிரஸ் அரசு கூறியது. ஆனால் இதுவரை தேர்தலை நடத்துவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.இந்நிலையில் பெங்களூரு ரூரல் மாவட்டத்தில் உள்ள தேவனஹள்ளி, நெலமங்களா, ராம்நகர் மாவட்டத்தின் ராம்நகர், மாகடி, சென்னபட்டணா உள்ளிட்ட பகுதிகளை, பெங்களூரு மாநகராட்சி உடன் இணைத்து, வளர்ச்சிப் பணிகள் செய்வதாக அரசு கூறி வருகிறது.எனவே, பெங்களூரு மாநகராட்சி பிரிப்பது, கூடுதல் வார்டுகளை அமைப்பது தொடர்பாக ஆய்வு நடத்த, ஓய்வு பெற்ற தலைமைச் செயலர் பி.எஸ்.பாட்டீல் தலைமையில் அரசு குழு அமைத்தது.இந்த குழு, சமீபத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், பெங்களூரு மாநகராட்சியை ஐந்தாக பிரித்து 400 வார்டுகள் உருவாக்கலாம் என்று அறிக்கை அளித்துள்ளது. 'கிரேட்டர் பெங்களூரு ஆணையம்' என உருவாக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சட்டம் ரத்து
ஒருவேளை கிரேட்டர் பெங்களூரில், ஆணையம் உருவாக்கப்பட்டால் மாநகராட்சி - 2020 சட்டம் ரத்து செய்யப்படும். தற்போது மாநகராட்சியின் பரப்பளவு 708 சதுர கி.மீட்டராக உள்ளது. மாநகராட்சி பிரிக்கப்பட்டு 400 வார்டுகள் அமைக்கப்பட்டால் 1,400 சதுர கி.மீட்டராக விரிவடையும்.மாநகராட்சியை ஐந்தாக பிரித்து, ஒவ்வொரு மாநகராட்சிக்கும் தலா ஒரு மேயர், ஒரு துணை மேயர் இருப்பார். நிலை குழுக்கள் ரத்து செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. பெங்களூரு மாநகராட்சியை ஐந்தாக பிரிக்கும் அரசின் முடிவுக்கு, பா.ஜ., எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. காவிரி குடிநீர்
தொகுதி மறுசீரமைப்பிற்கு பின்னர், 2007 ல், பெங்களூரு மாநகராட்சியில் 110 கிராமங்கள் சேர்க்கப்பட்டன. அந்த கிராமங்களுக்கு காவிரி குடிநீர் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதுவரை 110 கிராமங்களுக்கு காவிரி குடிநீரும், அடிப்படை வசதிகளும் கிடைக்கவில்லை.இப்படி இருக்கையில் கூடுதலாக பல பகுதிகளை இணைத்து என்ன செய்யப் போகின்றனர் என, பொதுமக்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.பெங்களூரு ரூரல் பகுதிகளை மாநகராட்சியுடன் இணைத்தால், அப்பகுதியில் உள்ள சொத்து மதிப்பு பல மடங்கு உயரும். பெங்களூரு ரூரல் பகுதிகளில் துணை முதல்வர் சிவகுமார் உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு சொத்துகள் எக்கசக்கமாக உள்ளன. தங்கள் சொத்து மதிப்பை அதிகரிக்க, ரூரல் பகுதிகளை மாநகராட்சி உடன் சேர்க்கப் பார்க்கின்றனர் என்றும் ஒரு பேச்சு பரவலாக அடிபடுகிறது.- நமது நிருபர் -