உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.826 கோடி ஒப்பந்த பணிகள் ரத்து செய்தது பீஹார் அரசு

ரூ.826 கோடி ஒப்பந்த பணிகள் ரத்து செய்தது பீஹார் அரசு

பாட்னா, பீஹாரில் கிராமப்புறங்களுக்கு குடிநீர் வசதி வழங்க, முந்தைய மகாகட்பந்தன் அரசு வழங்கிய ஒப்பந்த பணிகளில், 826 கோடி ரூபாய் மதிப்பிலான 350 ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுஉள்ளன.பீஹாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இதற்கு முன் காங்கிரஸ் தலைமையிலான மகாகட்பந்தன் கூட்டணியில் அங்கம் வகித்த நிதீஷ், அம்மாநில முதல்வராக பதவி வகித்து வந்தார்.ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக இருந்தார்.இந்த கூட்டணியில் இருந்து கடந்த ஜனவரியில் விலகிய நிதீஷ் குமார், பா.ஜ.,வுடன் சேர்ந்து மாநில முதல்வராக தொடர்கிறார்.பீஹாரில் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்ததும், துணை முதல்வராக இருந்த தேஜஸ்வி யாதவ், அமைச்சர்கள் லலித் யாதவ் மற்றும் ராமானந்த் யாதவ் பொறுப்பு வகித்த துறைகளில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை மறு ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.இதற்கான பணிகள் கடந்த பிப்ரவரியில் துவங்கின. இவற்றில், பொது சுகாதார பொறியியல் துறையில் வழங்கப்பட்ட ஒப்பந்தப் பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, பொது சுகாதார பொறியியல் துறை அமைச்சர் நீரஜ் குமார் சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:முந்தைய மகாகட்பந்தன் ஆட்சியில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த லலித் யாதவ் பொது சுகாதார பொறியியல் துறை அமைச்சராக பதவி வகித்தார்.அப்போது, பல்வேறு பணிகளுக்காக 4,600 கோடி ரூபாய் மதிப்பில் 1,160 ஒப்பந்தப் பணிகள் வழங்கப்பட்டுள்ளன. 17 மாதங்களில் இந்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு உள்ளன.இவற்றை மறு ஆய்வு செய்தபோது, கிராமப்புறங்களில் குடிநீர் வசதி செய்வதற்கான ஒப்பந்தங்கள் வழங்கியதில் முறைகேடுகள் கண்டறியப் பட்டுள்ளன.இதையடுத்து, 826 கோடி ரூபாய் மதிப்பிலான 350 ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளோம். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை