உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒடிசாவில் பா.ஜ., வரலாறு காணாத வெற்றி

ஒடிசாவில் பா.ஜ., வரலாறு காணாத வெற்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்:ஒடிசாவில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளத்தை வீழ்த்தி, அதிக பெரும்பான்மையுடன் பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. ஒடிசாவின் முதல்வராக, பிஜு ஜனதா தளத்தின் தலைவர் நவீன் பட்நாயக் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தார். இம்மாநிலத்தில் உள்ள 147 சட்டசபை தொகுதிகள் மற்றும் 21 லோக்சபா தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில், பிஜு ஜனதா தளம் 12 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.,வுக்கு எட்டு இடங்கள் கிடைத்தன. காங்., ஒரே ஒரு இடத்தை மட்டுமே பிடித்தது.

அதே ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், பிஜு ஜனதா தளம் 112 இடங்களில் அதிக பெரும்பான்மையுடன் மாபெரும் வெற்றி பெற்றது. பா.ஜ., 23 இடங்களையும், காங்., ஒன்பது இடங்களையும் பெற்றது.இந்நிலையில், நடந்து முடிந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களுக்கான கருத்துக் கணிப்பு சமீபத்தில் வெளியானது. இதில், இரு தேர்தல்களிலுமே பா.ஜ., அமோக வெற்றி பெறும் என, முடிவுகள் தெரிவித்தன. அந்த கணிப்புகள் தற்போது உண்மையாகி உள்ளன.மொத்தமுள்ள 147 சட்டசபை தொகுதிகளில் பா.ஜ., 78 இடங்களிலும், பிஜு ஜனதா தளம் 51 இடங்களிலும், காங்., 14 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.இதன் வாயிலாக கடந்த 25 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்த பிஜு ஜனதா தளத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. முதல்வர் நவீன் பட்நாயக் போட்டியிட்ட ஹின்ஜிலி மற்றும் கன்டாபன்ஜி ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள எட்டு அமைச்சர்கள் தோல்வியை தழுவினர்.மொத்தமுள்ள 21 லோக்சபா தொகுதிகளில் பா.ஜ., 19 இடங்களை கைப்பற்றியது. பிஜு ஜனதா தளம் மற்றும் காங்., தலா ஒரு இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.ஒடிசாவில், சுரங்கம் மற்றும் நிதி நிறுவன ஊழல்கள் தொடர்பாக பிஜு ஜனதா தள அரசு முறையான நடவடிக்கை எடுக்காததையும், விசாரணை கமிஷனின் அறிக்கையை வெளியிடாமல் மறைத்ததையும் பா.ஜ., கையில் எடுத்து, தேர்தல் பிரசாரத்தில் கிழித்தது.ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றபோது, அவரது கைகள் நடுங்குவதை மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர் அருகில் நின்றிருந்த முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி வி.கே.பாண்டியன், முதல்வரின் கைகளை மறைத்தார்.'முதல்வரின் உடல்நிலைக்கு என்ன ஆனது?' என, பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். மேலும், தமிழகத்தைச் சேர்ந்தவர் ஒடிசாவை ஆள்வதா என, பாண்டியனை மறைமுகமாக தாக்கினார். வயோதிகம் காரணமாக முதல்வர் பட்நாயக் துவண்டு போயிருப்பதையும், அவர் பாண்டியனின் கட்டுப்பாட்டில் இருப்பதையும் பா.ஜ., மறைமுகமாக சுட்டிக்காட்டியது. இது, தேர்தலில் பா.ஜ.,வுக்கு சாதகமான முடிவை தந்துள்ளது.ஒடிசா அரசியலில் எதிர்ப்பாளர்கள் யாருமின்றி தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த நவீன் பட்நாயக்கின் செல்வாக்கிற்கு, பா.ஜ., முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ஒடிசா சட்டசபை தேர்தல் முடிவுகள்

கட்சி பெயர் தொகுதி எண்ணிக்கைபா.ஜ., 78பிஜு ஜனதா தளம் 51காங்கிரஸ் 14மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1சுயேச்சை 3


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ