உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., ஆட்சி ஊழல் பட்டியல் சட்டசபையில் வாசித்த முதல்வர் சித்தராமையா

பா.ஜ., ஆட்சி ஊழல் பட்டியல் சட்டசபையில் வாசித்த முதல்வர் சித்தராமையா

பெங்களூரு: பா.ஜ., ஆட்சியில் நடந்த முறைகேடுகள் பட்டியலை, சட்டசபையில் முதல்வர் சித்தராமையா நேற்று வாசித்தார்.கர்நாடக சட்டசபையின் நேற்றைய கூட்டத்தின் போது, வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு வழக்கில், முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டுமென பா.ஜ., உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, சித்தராமையா விளக்கம் அளிக்க முயன்றார். ஆனால் அவரை பேசவிடாமல், பா.ஜ., உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.

எதிர்க்கட்சி வரிசை

இதனால், கடுப்பான சித்தராமையா, ''மாநில மக்கள் உங்களை திருடர்கள் என நினைத்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்த்தி உள்ளனர். நாங்கள் சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றி பெற்றோம். அனைத்து முறைகேடுகள் குறித்தும் விசாரணை நடத்தி, தவறு செய்தவர்களை சிறைக்கு அனுப்புவோம். வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர்,'' என்றார்.பின், பா.ஜ., ஆட்சியில் முறைகேடுகள் நடந்ததாக கூறிய சித்தராமையா, அது தொடர்பான பட்டியலை வாசித்தார்.கடந்த 2020- - 2021ல் ஏ.பி.எம்.சி., யில் 47.16 கோடி ரூபாய்; போவி மேம்பாட்டு ஆணையத்தில் 87 கோடி ரூபாய்; தேவராஜ் அர்ஸ் டிரக் டெர்மினலில் 50 கோடி ரூபாய்; கங்கா கல்யாண யோஜனா திட்டத்தில் 430 கோடி ரூபாய்; சுற்றுலாத் துறையில் 2.47 கோடி ரூபாய்; கியோனிக்சில் 500 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது.கொரோனா தடுப்பு என்ற பெயரில் 40,000 கோடி ரூபாய்; 40 சதவீத கமிஷன் மூலம் 2,000 கோடி ரூபாய்; எஸ்.ஐ., தேர்வு முறைகேட்டின் மூலம் 23 கோடி ரூபாய்; பிட்காயின் ஊழலில் பல ஆயிரம் கோடி.

சுரங்க ஊழல்

தோட்டக்கலை துறையில் 200 கோடி ரூபாய்; சுரங்க ஊழல், பள்ளி மாணவர்களுக்கு முட்டை வாங்கியதில் ஊழல், தொழில் துறையில் 2008 -- 2013 காலகட்டத்தில் நடந்த ஊழல்; விவசாயத்துறை ஊழியர்களிடம் பணம் வசூலிப்பு; குரு ராகவேந்திரா கூட்டுறவு வங்கியில் நடந்த மாபெரும் ஊழல்.இவையெல்லாம் பா.ஜ., அரசில் நடந்த ஊழல்களுக்கு சாட்சி. முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றவர். எடியூரப்பா ஊழல் செய்வதாக, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, கவர்னருக்கு கடிதம் எழுதினார்.பா.ஜ., ஆட்சியில் நடந்த எண்ணற்ற ஊழல்கள் அம்பலமாகி உள்ளன. ஊழல்கள் குறித்து நாங்கள் விசாரணை நடத்துகிறோம். ஊழல்வாதிகள் சிறைக்கு செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ