ராம்நகர் : ''அரசியலுக்காக கடவுள் பெயரை இழுப்பதை, பா.ஜ.,வினர் நிறுத்திக் கொள்ளட்டும்,'' என, காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.பெங்களூரு ரூரல் காங்கிரஸ் எம்.பி., சுரேஷ், ராம்நகரில் நேற்று அளித்த பேட்டி:லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகள் ஒருங்கிணைந்து, 'இண்டியா' கூட்டணி அமைத்துள்ளது. தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.அயோத்தி ராமர், பா.ஜ.,வின் சொத்து இல்லை. ராமர் அனைவருக்கும் கடவுள். அரசியலுக்காக கடவுளை நாங்கள் பயன்படுத்துவது இல்லை.கடந்த பத்து ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடி பொய் மட்டுமே பேசி உள்ளார். ராம நவமியை ஒட்டியாவது அவர் உண்மையை பேசட்டும்.மாநிலத்தில் பா.ஜ., ஆட்சி இருந்தபோது, ராம்நகரில் உள்ள ராமதேவர மலையை மேம்படுத்துவோம் என்று, அஸ்வத் நாராயணா கூறினார். பட்ஜெட்டில் அவர், எவ்வளவு நிதி வாங்கிக் கொடுத்தார்?ராமதேவர மலை வனப்பகுதிக்குள் இருப்பதால், சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து, அனுமதி பெற வேண்டும். அதை அவர் செய்தாரா?பா.ஜ., துண்டு அணிந்திருப்பவர்கள் எல்லாம், உண்மையான ராம பக்தர்கள் இல்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் தான், பா.ஜ.,வினர் ராமரை பற்றி பேசுவர். ராமர் எங்கள் ஊரிலும் உள்ளார். ராமரை பார்க்க அயோத்தி தான் செல்ல வேண்டுமா?பா.ஜ.,வினருக்கு ராமர் என்றால், எனக்கு ஹனுமன், கபாலம்மா, சாமுண்டீஸ்வரி உள்ளனர். அரசியலுக்காக கடவுள் பெயரை இழுப்பதை, பா.ஜ.,வினர் தயவு செய்து நிறுத்திக் கொள்ளட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.