அமேதி, :உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் அலுவலகத்தின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினர். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 80 லோக்சபா தொகுதிகளுக்கும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.ஏற்கனவே இருகட்ட தேர்தல்களில், 16 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது. இன்று மூன்றாம் கட்டத் தேர்தலில், 10 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. கல்வீச்சு
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு உத்தர பிரதேசத்தின் அமேதி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட கவுரிகஞ்ச் பகுதியில் காங்கிரஸ் அலுவலகத்திற்கு காரில் வந்த ஆறு பேர் அடங்கிய மர்ம கும்பல், அங்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.இதில், 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன; சில வாகனங்களில் இருந்தவர்கள் காயமடைந்தனர். உடனே, அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் காங்கிரசார் அனுமதித்தனர்.இதுகுறித்து காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரதீப் சிங்கால் கூறுகையில், “இச்சம்பவம், ஆளும் பா.ஜ.,வின் திட்டமிட்ட தாக்குதல் ஆகும். இது, அவர்களின் விரக்தியை காட்டுகிறது.''இச்சம்பவத்தை தடுக்காமல், போலீசார் மெத்தனமாக செயல்பட்டனர். இது தொடர்பாக, தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க உள்ளோம்,” என்றார்.இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி., அனுப் குமார் சிங் கூறுகையில், “காங்கிரஸ் அலுவலகத்தின் வெளியே மர்ம நபர்கள் சிலர் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதாக அக்கட்சி நிர்வாகிகள் புகார் அளித்துஉள்ளனர். ''இதையடுத்து, அந்த அலுவலக வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்,” என்றார்.இதற்கிடையே காங்கிரசின் குற்றச்சாட்டை பா.ஜ., திட்டவட்டமாக மறுத்துள்ளது.இது தொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி கூறுகையில், “காங்கிரஸ் அலுவலகத்தில் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி, அனுதாப ஓட்டுகளை பெற்று, அமேதி லோக்சபா தொகுதியை வெல்ல திட்டமிட்டுள்ளது. தீவிர விசாரணை
''இதுபோன்ற மோசமான தந்திரங்களை அக்கட்சியினர் மேற்கொண்டுள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷன் தீவிர விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கண்டறிய வேண்டும்,” என்றார்.ராகுல் உள்ளிட் காங்., தலைவர்கள் போட்டியிட்ட தொகுதி, அமேதி. தற்போது பா.ஜ., சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். இதில் காங்கிரஸ் சார்பில் ராகுல் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், ராகுல் குடும்பத்துக்கு நெருக்கமான கிேஷாரி லால் சர்மா நிறுத்தப்பட்டுள்ளார்.
தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
உத்தர பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி லோக்சபா தொகுதிகளுக்கு காங்கிரஸ் சார்பில் தேர்தல் பார்வையாளர்களாக ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் ஆகியோரை அக்கட்சி தலைமை நியமித்துள்ளது. ஏற்கனவே, அத்தொகுதிகளில் காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா, தன் தேர்தல் பிரசாரத்தை துவக்கிய நிலையில், தற்போது மூத்த தலைவர்கள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இரு தொகுதிகளிலும் முகாமிட்டுள்ள பிரியங்கா, வீடுவீடாக சென்று ஓட்டுசேகரிக்கவும் திட்டமிட்டுள்ளார். இது தவிர, சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களையும் அவர் நேரடியாக கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.