பெங்களூரு: ''எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட நிதி, வாக்குறுதி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது,'' என வாக்குறுதி திட்டங்கள் செயல்படுத்தும் கமிட்டி தலைவர் ரேவண்ணா தெரிவித்தார்.கர்நாடக அரசு, ஐந்து வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தியது. இதற்காக 60,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை செலவிடுகிறது. அதிகமான பணம் தேவைப்படுவதால், வளர்ச்சி திட்டங்களின் நிதி, வாக்குறுதி திட்டங்களுக்கு பயன்படுத்துவதாக கூறப்பட்டது. எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய், வாக்குறுதி திட்டங்களுக்கு பயன்படுத்துவதாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.ஆனால், இதை முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட அமைச்சர்கள் மறுத்தனர். 'தலித்துகளின் நிதியை, அவர்களின் மேம்பாட்டுக்காக மட்டுமே பயன்படுத்துகிறோம். வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்தவில்லை' என தெரிவித்தனர்.இதற்கிடையில், எஸ்.சி., - எஸ்.டி.,யினர் நிதி, வாக்குறுதி திட்டங்களுக்கு பயன்படுத்துவது உண்மைதான் என, காங்., மூத்த தலைவரும், வாக்குறுதி திட்டங்கள் செயல்படுத்தும் கமிட்டி தலைவருமான ரேவண்ணா கூறியுள்ளார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, சித்த ராமையா அரசு சரியாக பயன்படுத்துகிறது. ஐந்து வாக்குறுதி திட்டங்களில், தலித் பயனாளிகளும் உள்ளனர். எனவே இந்த திட்டங்களுக்கு, எஸ்.சி., - எஸ்.டி.,யினர் நிதி பயன்படுத்தப்படுகிறது. பணம் தவறாக பயன்படுத்தப்பட்டால், நாங்கள் ஆய்வு செய்வோம்.இது தொடர்பாக, எஸ்.சி., - எஸ்.டி., தேசிய ஆணையம், மாநில அரசுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. இதற்கு நாங்கள் பதிலளிப்போம். மத்தியிலும், மாநிலத்திலும் வெவ்வேறு ஆணையங்கள் உள்ளன.தலித்துகளின் நிதியை, வாக்குறுதி திட்டங்களுக்கு பயன்படுத்தியது குறித்து சட்டசபையில் விவாதிப்பதாக எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர். அவர்கள் விவாதிக்கட்டும். அது அவர்களின் வேலை. நானும் கூட அதைத்தான் செய்தேன். நாங்கள் பதிலளிக்க தயார். பா.ஜ.,வினர் கூறுகின்றனர் என்பதால், நாங்கள் பயப்பட முடியுமா.இவ்வாறு அவர் கூறினார்.