பெங்களூரு: முதல்வர் சித்தராமையா மீது விசாரணைக்கு உத்தரவிட்டதால், கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை மிரட்டிய காங்., தலைவர்களை கண்டித்து, கர்நாடகா முழுதும் பா.ஜ.,வினர் நேற்று போராட்டம் நடத்தினர்.'மூடா' முறைகேட்டில், முதல்வர் சித்தராமையாவிடம் லஞ்ச ஒழிப்பு பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவதற்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட், இம்மாதம் 17ம் தேதி அனுமதி அளித்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரசார், 'பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் மீதான முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த அனுமதி வழங்காமல், முதல்வர் வழக்கில் மட்டும் அவசர நடவடிக்கையை, கவர்னர் எடுத்துள்ளார்' என்று குற்றஞ்சாட்டினர்.மேலும், கவர்னரை கண்டித்து மாநிலம் முழுதும், கடந்த 19ம் தேதி காங்., தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, அமைச்சர்கள் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் சர்ச்சைக்குரிய வார்த்தைகளால், கவர்னரை கடுமையாக விமர்சித்தனர். சிலர் கவர்னரை மிரட்டும் வகையிலும் பேசினர். வெளியேற்றுவோம்
மங்களூரில் நடந்த போராட்டத்தில், காங்கிரஸ் எம்.எல்.சி., ஐவன் டிசோசா பேசுகையில், 'வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டது போல், கவர்னர் தாவர்சந்த் கெலாட்டையும் வெளியேற்றுவோம்' என்றார்.'கவர்னருக்கு மிரட்டல் விடுத்த காங்., தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பா.ஜ., சார்பில் மாநில டி.ஜி.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டது.இந்நிலையில், கவர்னருக்கு மிரட்டல் விடுத்த காங்கிரசை கண்டித்து, மாநிலம் முழுதும் நேற்று பா.ஜ., சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.பெங்களூரு, மைசூரு, மாண்டியா, கோலார், மங்களூரு, பெலகாவி உட்பட மாநிலம் முழுதும் பா.ஜ.,வினர் நேற்று போராட்டம் நடத்தினர்.அப்போது, காங்கிரஸ் ஆட்சியில் நடந்த முறைகேடுகள் தொடர்பான பதாகைகளை வைத்து, கோஷம் எழுப்பினர். அத்துடன், 'மூடா' முறைகேடுக்கு பொறுப்பேற்று, முதல்வர் சித்தராமையா பதவியை ராஜினாமா செய்யும்படியும் வலியுறுத்தினர்.மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி தலைமையில் பெங்களூரு சுதந்திர பூங்காவில் நடந்த போராட்டத்தில், அவர் பேசியதாவது:தான் பிற்படுத்தப்பட்ட சமுதாய தலைவர் என்பதால், பா.ஜ.,வினர் தொந்தரவு கொடுப்பதாக முதல்வர் கூறுகிறார். செயல்பாடு
பிரதமர் நரேந்திர மோடியும், பிற்படுத்தப்பட்ட சமுதாய தலைவர் தான். அவர் களங்கம் இல்லாத தலைவர்.ஆனால், கவர்னர் தாவர்சந்த் கெலாட், தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். அவரை அவமானப்படுத்தும் வகையில், காங்கிரஸ் தலைவர்கள் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இதனால், முதல்வர், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.முதல்வருக்கு புத்தி உள்ளதா. அரசு நிலத்தை அபகரித்து விட்டு, பதவியில் இருந்து விலக மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். மாநிலமே முதல்வரின் செயலை கண்டிக்கிறது. ஆனாலும், நாற்காலியில் ஒட்டி கொண்டிருக்கிறார்.இவ்வாறு அவர் பேசினார்.இதேபோல, ஷிவமொகாவில் மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தலைமையிலும், மாண்டியாவில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் தலைமையிலும் போராட்டம் நடந்தது.
எம்.எல்.சி., வீட்டில் கல்வீச்சு
'கவர்னரை மாநிலத்தை விட்டு வெளியேற்றுவோம்' என பேசிய காங்கிரஸ் எம்.எல்.சி., ஐவன் டிசோசா மீது, மங்களூரு பாண்டேஸ்வர் போலீஸ் நிலையத்தில் பா.ஜ., சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு மங்களூரு வெலன்ஜியா பகுதியில் உள்ள ஐவன் டிசோசா வீட்டின் மீது மர்ம நபர்கள் கல்வீசினர். இதில் ஜன்னல் கண்ணாடி உடைந்தது.தகவல் அறிந்த பாண்டேஸ்வர் போலீசார் விரைந்து சென்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஸ்கூட்டரில் வந்த இரண்டு பேர், நடந்து வந்த இரண்டு பேர் கல்வீசியது தெரிந்தது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐவன் டிசோசா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கல்வீச்சு நடந்தபோது ஐவன் டிசோசா வீட்டில் இல்லை. அவரது குடும்பத்தினர் மட்டுமே வீட்டில் இருந்தனர்.