உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருமண உறவுகளின் புனிதம்: புரிந்துகொள்ள இளம் தலைமுறையினருக்கு கோர்ட் அறிவுரை

திருமண உறவுகளின் புனிதம்: புரிந்துகொள்ள இளம் தலைமுறையினருக்கு கோர்ட் அறிவுரை

புதுடில்லி, : திருமணம் என்பது வெறும் ஆட்டம், பாட்டம், வகை வகையான விருந்து என்பதல்ல. ஹிந்து திருமணச் சட்டத்தின்படி, அது ஒரு புனிதமான உறவு. திருமண வாழ்க்கைக்குள் நுழைவதற்குமுன், இந்த சடங்குகளின் முக்கியத்துவத்தை, அதன் மகிமையை இளம் தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும் என, உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.ஹிந்து திருமணச் சட்டத்தின்கீழ், விவாகரத்து கேட்டு இளம் தம்பதியினர் தொடர்ந்த வழக்கில் விவாகரத்து வழங்கி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்தினா, அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அமர்வு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அப்போது அமர்வு கூறியுள்ளதாவது:ஹிந்து திருமணச் சட்டத்தின்படி, சில முக்கிய சடங்குகளை பின்பற்ற வேண்டும். அந்த சடங்குகள் செய்தால் மட்டுமே, அந்த திருமணம் செல்லும்.குறிப்பாக, 'சாத்படி' எனப்படும், அக்னியை சாட்சியாக வைத்து, ஏழு அடிகள் தம்பதியினர் வைப்பதாகும். இதற்கான பெரும் முக்கியத்துவம், ரிக் வேதம் உள்ளிட்டவற்றில் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு ஏழு அடிகளை, அந்த ஜோடி எடுத்து வைக்கும்போது, ஒருவரை ஒருவர் நண்பர்களாக ஏற்றுக் கொண்டு, வாழ்க்கை முழுதும் சேர்ந்து இருப்போம் என்று உறுதி ஏற்பதுதான். இருவரும் தனித்தனி நபர்களாக இருந்தாலும், அர்த்தாங்கினி எனப்படும் ஆணின் சரிபாதியாக பெண்ணை ஏற்றுக் கொள்வதுதான், இந்த சடங்கு. அதாவது, திருமண வாழ்க்கையில், இருவரும் சமமாகவும், சரிபாதியாகவும் வழி நடத்திச் செல்வது என்பதை குறிக்கிறது.இதுபோல், ஹிந்து திருமணச் சட்டத்தில், ஒவ்வொரு சடங்குக்கும் பல அர்த்தங்கள் உள்ளன. ஆனால், இந்த வழக்கில் உள்ள தம்பதியினர், அதுபோன்ற சடங்குகளை செய்யவில்லை என்று கூறியுள்ளனர். அதனால், இந்தத் திருமணம் செல்லுபடியாகாது.திருமண பந்தத்துக்குள் நுழைவது என்பது, ஹிந்து மதத்தில் மிகவும் புனிதமாகப் பார்க்கப்படுகிறது. வாழ்க்கை முழுதும் இருவரும் இணைந்து, இந்த சமூகத்துக்கான கடமைகளை நிறைவேற்ற உறுதியேற்பதுதான் திருமணமாகும். வெறும் ஆட்டம், பாட்டம், வகைவகையான விருந்து ஆகியவை மட்டும் திருமணம் அல்ல. திருமண வாழ்க்கையில் நுழைய உள்ள இளம் தலைமுறையினர், திருமணம், திருமண உறவு போன்றவற்றின் மகிமையை புரிந்துகொள்ள வேண்டும்.அப்போதுதான், தம்பதியினர் இடையே மனதளவிலும் நெருக்கம் ஏற்படும். திருமண வாழ்க்கையும் வெற்றியடையும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை