உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உங்கள் எல்லைகளை தாண்டிவிட்டீர்கள் யோகா குரு ராம்தேவுக்கு கோர்ட் கண்டனம்

உங்கள் எல்லைகளை தாண்டிவிட்டீர்கள் யோகா குரு ராம்தேவுக்கு கோர்ட் கண்டனம்

புதுடில்லி,தவறான விளம்பரம் தொடர்பான வழக்கில், முறையான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாததற்காக, 'பதஞ்சலி' நிறுவனம், அதன் உரிமையாளரான யோகா குரு ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அடுத்த விசாரணையின் போது, நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டது. யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் பல்வேறு ஆயுர்வேத பொருட்களை தயாரிக்கிறது.

விளம்பரம்

இந்த பொருட்கள், பலவகையான நோய்களை குணப்படுத்தும் திறன் உள்ளதாக, அது விளம்பரம் செய்து வந்துள்ளது. மேலும் அலோபதி மருத்துவத்தால், கொரோனா உள்ளிட்டவற்றை குணப்படுத்த முடியாது என்றும் விளம்பரம் செய்தது.இதை எதிர்த்து, ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய மருத்துவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான விசாரணையின்போது, மற்ற மருத்துவ முறைகளை குறைத்து மதிப்பிடும் வகையில் விளம்பரம் செய்வதற்கு நீதிமன்றம் கண்டிப்பு தெரிவித்தது. இதையடுத்து, இதுபோன்ற விளம்பரங்கள் செய்யப்படாது என, பதஞ்சலி நிறுவனம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.ஆனாலும், இதுபோன்ற விளம்பரங்கள் தொடர்ந்து வெளிவருவதாக, ஐ.எம்.ஏ., சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, யோகா குரு ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிர்வாக இயக்குனர் ஆச்சாரியா பாலகிருஷ்ணா, நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.இதன்படி, நீதிபதிகள் ஹீமா கோஹ்லி, அசானுதீன் அமானுல்லா அடங்கிய அமர்வின் முன், இருவரும் நேற்று ஆஜராகினர். அப்போது அமர்வு கூறியுள்ளதாவது:நாட்டின் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் மட்டுமல்ல, எந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும், அதை பின்பற்ற வேண்டும். இந்த விஷயத்தில் நீங்கள் மன்னிப்பு கேட்டாலும் அதை ஏற்கத் தயாராக இல்லை.நடவடிக்கைகளை சந்திக்க தயாராக இருங்கள். நீங்கள் உங்களுடைய எல்லைகளை எப்போதோ தாண்டிவிட்டீர்கள்.

பிரமாண பத்திரம்

இந்த பொய் தகவல்கள் கூறும் விளம்பரங்கள் தொடர்பாக இதுவரை முறையாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை. இதை ஏற்க முடியாது. உங்களுடைய இஷ்டத்துக்கு செயல்பட முடியாது.இந்த நிறுவனம், இதுபோன்ற விளம்பரங்களை வெளியிட்டபோது, மத்திய அரசு ஏன், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கண்டும் காணாமல் இருந்துள்ளது.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.இதையடுத்து, பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய, ஒரு வாரம் அவகாசம் அளித்து, ஏப்., 10ம் தேதிக்கு வழக்கை, அமர்வு ஒத்தி வைத்தது.அன்றைய தினமும், இருவரும் நேரில் ஆஜராக அமர்வு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை