| ADDED : ஜூன் 27, 2024 10:59 PM
ஷிவமொகா: 'லஞ்சம் கொடுத்தால் நீதிபதி ஜாமின் கொடுப்பார்' என்று கூறிய, பெண் இன்ஸ்பெக்டருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.ஷிவமொகா டவுன் வினோபா நகரில் வசிப்பவர் மஞ்சுநாத். பாக்கு மண்டி உரிமையாளர். இவரிடம் பாக்குகள் வாங்கிய, மூன்று வியாபாரிகள் பணம் கொடுக்காமல் மோசடி செய்தனர்.இது குறித்து, வினோபா நகர் போலீசில் புகார் செய்தார். மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமின் கிடைத்தது. இந்நிலையில் வினோபா நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலாவிடம், மஞ்சுநாத் மொபைல் போனில் பேசினார்.'என்னிடம் பண மோசடி செய்தவர்களுக்கு ஜாமின் கிடைத்து விட்டது' என்று புலம்பினார். அப்போது சந்திரகலா, 'உங்களிடம் மோசடி செய்த பணத்தை பயன்படுத்தி, நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்து ஜாமினில் வந்து விட்டனர்' என்று கூறினார்.இவர்கள் இருவர் இடையிலான உரையாடல் ஆடியோ வெளியானது. இது குறித்து நீதிபதி, ஷிமொகா எஸ்.பி., கவனத்திற்கு கொண்டு சென்றார். 'சந்திரகலா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் கேட்டுக் கொண்டார்.இதையடுத்து கிழக்கு மண்டல ஐ.ஜி., தியாகராஜன், விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, சந்திரகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.