புதுடில்லி:பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய, சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின், டி.ஐ.ஜி., கஜன் சிங்கை பணியில் இருந்து நீக்கி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.சி.ஆர்.பி.எப்., படையின் மேற்கு பிரிவின் கீழ், மஹாராஷ்டிராவின் நவி மும்பையில், டி.ஐ.ஜி., கஜன் சிங் பணிபுரிந்து வந்தார். இவர் மீது, படையில் பணிபுரியும் பெண்கள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தனர்.இது குறித்து, சி.ஆர்.பி.எப்., தனிக்குழு அமைத்து விசாரித்து வந்தது. விசாரணையில், டி.ஐ.ஜி., கஜன் சிங் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானவை என, தெரிய வந்தது.இதையடுத்து, மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் பரிந்துரைப்படி, இது குறித்து விளக்கம் அளிக்கும்படி, அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு பதிலளிக்க மறுத்த கஜன் சிங், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்ததோடு, தன் இமேஜை கெடுக்கும் வகையில் இது போன்று புகார் அளிக்கப்பட்டதாக கூறினார்.தொடர்ந்து, மத்திய பணியாளர் தேர்வாணையம், மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவற்றின் ஒப்புதலின்படி விளக்கம் கேட்டு, டி.ஐ.ஜி., கஜன் சிங்கிற்கு, சி.ஆர்.பி.எப்., படை இறுதியாக இரு நோட்டீஸ்களை அனுப்பியது. இந்நிலையில், டி.ஐ.ஜி., கஜன் சிங்கை பணியில் இருந்து நீக்கி, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுஉள்ளது. இந்த பணி நீக்க உத்தரவு, மே 31 முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.- நமது நிருபர் -