| ADDED : ஆக 16, 2024 06:44 AM
பெங்களூரு: கர்நாடகாவின் மைசூரு, ஹாசன், மங்களூரு உட்பட 10 மாவட்டங்களின் சுற்றுலா தலங்களில் நட்சத்திர ஹோட்டல்கள் துவங்க சுற்றுலா துறை முடிவு செய்துள்ளது.கர்நாடகாவில் சுற்றுலா தலங்கள் அதிகளவில் உள்ளன. இத்தலங்களை மேம்படுத்த, குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க சுற்றுலா துறை முடிவு செய்துள்ளது. இதற்காக 2025 முதல் 2030 வரைக்கான, ஐந்தாண்டுக்கான புதிய சுற்றுலா கொள்கையை உருவாக்கி உள்ளது.அதன் முக்கிய அம்சங்கள்:மைசூரு, ஹாசன், மங்களூரு உட்பட 10 இடங்களிலும் நட்சத்திர ஹோட்டல்கள் கட்டுவது; 30 உயர்தர ஹோட்டல்கள் கட்டுவது. இவை அனைத்தும் பி.பி.பி., எனும் தனியார் - பொதுத்துறையுடன் இணைந்து கட்டப்படும்.முதற்கட்டமாக 30 உணவகங்கள் கட்டி, சுற்றுலா பயணியர் கருத்து கேட்கப்படும். பின், மாநிலத்தின் அனைத்து சுற்றுலா தலங்களிலும் உணவகங்கள் கட்டப்படும்.கடலோர மாவட்டங்களில் சிறிய அளவிலான கப்பல்கள் மூலம், சுற்றுலா பயணியரை கடலில் அழைத்துச் செல்வது; சொகுசு கப்பல் மூலம் கடலில் உள்ள தீவுகளுக்கு அழைத்துச் செல்வது. அந்த தீவை அவர்கள் சுற்றிப் பார்க்கலாம். பின், மீண்டும் படகில் அழைத்து வரப்படுவர். இதனால் வேலை வாய்ப்புகள் உருவாகும்.வனப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும், வனங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், பயணியரை கவர நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.சுற்றுலா துறை அதிகாரிகள் கூறுகையில், 'தயாராக உள்ள சுற்றுலா கொள்கை, அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும். ஒப்புதல் கிடைத்த உடன், 2025ம் ஆண்டின் முதல் நாளில் புதிய கொள்கை அமல்படுத்தப்படும்' என்றனர்.