பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில், துணை முதல்வர் சிவகுமாரிடம், லோக் ஆயுக்தா போலீசார், இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினர்.கர்நாடகாவில், 2013 - 2018 வரை காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அப்போது, நீர்ப்பாசன துறை அமைச்சராக இருந்த சிவகுமார், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக கூறி, அவரது வீடு, அலுவலகங்கள் என 60க்கும் மேற்பட்ட இடங்களில், 2017ல் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. ஜாமினில் விடுதலை
அப்போது, கணக்கில் காட்டப்படாத ரொக்க பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கத்துறை சிவகுமாரை கைது செய்து, டில்லி திஹார் சிறையில் அடைத்தது. பின், ஜாமினில் வெளியே வந்தார்.இந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதற்கிடையில் சிவகுமாரின் இந்த சொத்து குவிப்பு வழக்கில், லோக் ஆயுக்தா விசாரணை நடத்தும்படி, முந்தைய பா.ஜ., அரசு உத்தரவிட்டது.இது தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகும்படி, சிவகுமாருக்கு, கடந்த வாரம் லோக் ஆயுக்தா தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அவர் வரவில்லை. இதனால், நேற்று முன்தினம் இரண்டாவது சம்மன் அனுப்பப்பட்டது. நேற்று வருவதாக பதில் அனுப்பினார். இதன் அடிப்படையில், பெங்களூரு அம்பேத்கர் வீதியில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்தில், நேற்று மதியம் சிவகுமார் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம், லோக் ஆயுக்தா போலீஸ் டி.எஸ்.பி., சதீஷ், இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினார்.விசாரணை முடிந்த பின், சிவகுமார் கூறியதாவது:கடந்த ஆறு மாதங்களாக லோக் ஆயுக்தா விசாரணை நடத்தி வருகிறது. இவர்களை விட சி.பி.ஐ., விசாரணையே பரவாயில்லை. வித்தியாசமான கேள்விகளை கேட்கின்றனர். சி.பி.ஐ., அதிகாரிகள் இன்னும் என்னை கேள்விகளே கேட்கவில்லை. ஒரு நாளும் விசாரணைக்கு அழைக்கவில்லை.தொடரும் இம்சைஆனால், லோக் ஆயுக்தாவினர் இம்சை கொடுக்கின்றனர். அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன். சில கேள்விகளுக்கு விளக்கம் கேட்டனர். என்னிடம் இருக்கும் ஆவணங்களை தாக்கல் செய்வேன்.அமலாக்கத்துறை, சி.பி.ஐ., எனக்கும், என் நண்பர்கள், குடும்பத்தினருக்கு மிகவும் தொல்லை கொடுக்கின்றனர். தற்போது, லோக் ஆயுக்தாவினரும் தொல்லை கொடுக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.