புதுடில்லி, இந்திய கடற்படையின், 26வது தலைமை தளபதியாக, தினேஷ் குமார் திரிபாதி, 60, நேற்று பொறுப்பேற்றார். நம் கடற்படை தலைமை தளபதியாக இருந்தவர் ஹரி குமார். இவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து, புதிய தலைமை தளபதியாக, கடற்படை செயல்பாட்டு தலைமை இயக்குனராக பொறுப்பு வகித்த தினேஷ் குமார் திரிபாதி, சமீபத்தில் நியமிக்கப்பட்டார். பல்வேறு பொறுப்பு
கடந்த 1964 மே 15ல் பிறந்த இவர், 1985 ஜூலை 1ல் கடற்படையில் சேர்ந்தார். கடந்த 39 ஆண்டுகளில், கடற்படையில் பல்வேறு பொறுப்புகளை இவர் வகித்துஉள்ளார்.இந்நிலையில், டில்லியில் நேற்று நடந்த விழாவில், நம் கடற்படையின் புதிய தலைமை தளபதியாக, தினேஷ் குமார் திரிபாதி நேற்று பொறுப்பேற்றார். பொறுப்பு ஏற்பதற்கு முன், தன் தாயார் ரஜினி திரிபாதியின் காலில் விழுந்து அவர் ஆசி பெற்றார்.பொறுப்பேற்ற பின், கடற்படை தலைமை தளபதி தினேஷ் குமார் திரிபாதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஒருங்கிணைந்த, நம்பகமான, எதிர்கால சக்தியாக நம் கடற்படை உருவெடுத்துள்ளது. தேசிய வளர்ச்சி
கடற்பரப்பில் தற்போதுள்ள மற்றும் வளர்ந்து வரும் சவால்கள், கடலில் எதிரிகளை தடுக்கவும், போரை வெல்வதற்கும் இந்திய கடற்படை எப்போதும் தயாராக இருக்க வேண்டும். கடற்படையில், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது, தேசிய வளர்ச்சியின் முக்கிய துாணாக மாறுவது, வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய ஒத்துழைப்பது போன்றவை எங்களது முக்கிய பணிகளாகும்.இவ்வாறு அவர் கூறினார்.