மேலும் செய்திகள்
ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக குடும்பத்தினரை கொன்ற நபர் கைது
3 hour(s) ago | 2
முதலியார்பேட்டையில் நாளை குடிநீர் கட்
4 hour(s) ago
உழவர்கரை நகராட்சியில் தெரு நாய்களுக்கு கருத்தடை
4 hour(s) ago
பெங்களூரு : ''மகாராஜாக்கள் போல் உங்களை கருதிக் கொள்ள வேண்டாம்,'' என, கலெக்டர்கள், சி.இ.ஓ.,க்களுக்கு, முதல்வர் சித்தராமையா 'டோஸ்' விட்டுள்ளார்.கலெக்டர்கள், சி.இ.ஓ., எனும் முதன்மை செயல் அதிகாரிகள், மாவட்ட பொறுப்பு செயலர்களுடன், பெங்களூரு விதான் சவுதா மாநாட்டு மண்டபத்தில், முதல்வர் சித்தராமையா நேற்று ஆலோசனை நடத்தினார். துணை முதல்வர் சிவகுமார் மற்றும் அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர்.கூட்டத்தில், சித்தராமையா பேசியதாவது:கலெக்டர்கள், சி.இ.ஓ.,க்கள், மாவட்ட பொறுப்புச் செயலர்கள் இணைந்து செயல்பட்டால் தான், அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைய முடியும். கர்நாடகாவில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கலெக்டர்கள் தாலுகா அளவிலான அதிகாரிகளை சந்தித்து, வேலைகளை துரிதப்படுத்த வேண்டும். விரிவான தகவல்
இவ்வளவு நாட்கள் அலட்சியமாக இருந்த கீழ்மட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இனிமேல் இருந்து அலட்சியமாக இருக்கும் உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயும்.தங்களது மாவட்டங்களை பற்றிய விரிவான தகவல்களை, உள்ளங்கையில் வைத்துக் கொண்டு விடா முயற்சியுடன் கலெக்டர்கள் பணியாற்ற வேண்டும். அப்போது தான் முன்னேற்றம், வளர்ச்சியின் வேகத்தை காண முடியும். வளர்ச்சியும், சட்டம்- - ஒழுங்கும் ஒன்றை ஒன்று பூர்த்தி செய்கின்றன. ஒன்று இல்லாமல் ஒன்று இல்லை. நடவடிக்கை
நல்லாட்சியில் கர்நாடகா மாநிலம் முன்மாதிரியாக திகழ்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. இந்தப் பெருமையை தொடரும் பொறுப்பு, உங்கள் மீது உள்ளது. நான் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது என்னை சந்தித்து மக்கள் 15,000 முதல் 20,000 மனுக்கள் வரை கொடுக்கின்றனர்.நீங்கள் நன்றாக வேலை செய்திருந்தால், என்னிடம் ஏன் இத்தனை பேர் வருகின்றனர்? நீங்கள் நடத்தும் மக்கள் குறை தீர்ப்புக் கூட்டங்களில் இருந்து பெறப்படும் மனுக்களை என்ன செய்கிறீர்கள்?மக்கள் பிரச்னைகள் குறித்த மனுக்கள், நேர்மறையாக தீர்க்கப்படுவதில்லை. மனுக்கள் மீது சரியான முறையில் தீர்வு காணப்படவில்லை என்றால், உங்கள் மீது நடவடிக்கை நிச்சயம். உங்களை நீங்கள் மகாராஜாக்கள் போன்ற உணர்ந்தால், வளர்ச்சியும், முன்னேற்றமும் சாத்தியமில்லை. மண்வளம்
கர்நாடகாவில் மண்வளம் குறைந்து வருகிறது. இதை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுப்பதுடன், இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மண் பரிசோதனை செய்ய வேண்டும். இந்தப் பணியை மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான அலுவலகங்கள் ஒருங்கிணைந்து செய்ய வேண்டும்.தங்களது மாவட்டங்களின் பொருளாதார ஆய்வு அறிக்கையை கலெக்டர்கள் படித்தால் தான், மாவட்டத்தின் நிலைமையை புரிந்து கொள்ளலாம். பல்லாரியில் மன்றோ என்பவர், கலெக்டராக இருந்தார். அவர் செய்த நல்ல பணிகளால் அங்குள்ள மக்கள், தங்கள் குழந்தைகளுக்கு, மன்றோவின் பெயரை சூட்டுகின்றனர். நாம் அனைவரும் பொது ஊழியர்கள் என்ற உணர்வுடன் பணியாற்ற வேண்டும். அப்போது தான் மக்களாட்சியை கொடுக்க முடியும். எனக்கு வருத்தம்
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரிகள் செய்த பணிகளையும், இன்றைய அதிகாரிகள் செய்யும் பணிகளையும் ஒப்பிடும்போது, நிர்வாகம் மிகவும் திறமையாக மாறியிருக்க வேண்டும். ஆனால் இன்னும் திறமையாகவும், தரமாகவும் இல்லை. இது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது.ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் கிடைக்க வைப்பது உங்களால் மட்டுமே சாத்தியமாகும். ஏழைகள் மீது உங்களுக்கு கருணை இருக்க வேண்டும். சமத்துவமின்மையை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.அசுத்த குடிநீரை குடிப்பதால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடந்தால் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கார்டு ரத்து
'கங்கா கல்யாண் யோஜனா' திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள பம்ப்செட்டுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். பழங்குடியின மக்களுக்கு வன நிலம் ஒதுக்கீடு செய்ய 26,126 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இந்த விண்ணப்பங்களை சரி பார்த்து பணிகளை முடிக்க வேண்டும்.மாநிலத்தில், 80 சதவீதம் பேர் பி.பி.எல்., ரேஷன் கார்டு வைத்துள்ளனர். நிதி ஆயோக் அறிக்கையின்படி மாநிலத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் 5.67 சதவீதமாக இருக்க வேண்டும். ஆனால் மாநிலத்தில் 1.27 கோடி குடும்பங்களுக்கு பி.பி.எல்., ரேஷன் கார்டு வழங்கி உள்ளோம். தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்ட ரேஷன் கார்டுகளை ரத்து செய்து தகுதியானவர்களுக்கு வழங்க வேண்டும். 783 கோடி ரூபாய்
மக்களை தேவை இன்றி அலைய வைக்காதீர்கள். அவர்களின் குறைகளை கேட்டு தேவையான தீர்வுகளை வழங்க வேண்டும். மாநிலத்தின் ஏற்பட்ட வறட்சியை சிறப்பாக கையாண்டு உள்ளோம். குடிநீர் பிரச்னை உள்ள கிராமங்களை முன்கூட்டியே கண்டறிந்து மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதால், எங்கும் குடிநீர் பிரச்னை இல்லை. கலெக்டர்கள் வங்கிக் கணக்குகளில் 783 கோடி ரூபாய் பணம் உள்ளது.நடப்பு பருவமழைக் காலத்தில் மாநிலத்தில் இதுவரை 7 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு மழை அதிகம் பெய்யும் வாய்ப்பு உள்ளது. ஓய்வூதியம்
மழையால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் மழையை கையாள தனிப்படைகள் அமைக்க வேண்டும். மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாட்டிலேயே, கர்நாடகா மாநிலத்தில் தான், 76 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மாவட்டங்களில் எத்தனை ஓய்வூதிய விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன என்பதை கண்டறிந்து அவற்றை தீர்க்க கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வூதியம் பெறுவோர் மரணமடைந்தால் ஓய்வூதியத்தை நிறுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.தற்கொலை செய்யும் விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்குவதில் தாமதம் செய்வது நியாயம் இல்லை. விவசாயிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்த கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டத்தை துவங்க வேண்டும். மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுடன் சேர்ந்து, கலெக்டர்கள் அடிக்கடி மக்கள் குறை தீர்ப்புக் கூட்டங்களை நடத்த வேண்டும்.மாணவர்களை விடுதியில் சேர்க்கும் செயல்முறையை ஆன்லைனில் மேற்கொள்ள வேண்டும். தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கலெக்டர்கள், சி.இ.ஓ.,க்கள், மாவட்ட பொறுப்புச் செயலர்களுடன், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இடம்: விதான் சவுதா, பெங்களூரு.
3 hour(s) ago | 2
4 hour(s) ago
4 hour(s) ago