உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாடு சம்பவத்தை பாடமாக கருதணும் கர்நாடக அரசுக்கு வல்லுனர்கள் எச்சரிக்கை

வயநாடு சம்பவத்தை பாடமாக கருதணும் கர்நாடக அரசுக்கு வல்லுனர்கள் எச்சரிக்கை

பெங்களூரு: வயநாட்டில் நடந்த நிலச்சரிவு அசம்பாவிதம், கர்நாடகாவுக்கு பாடமாக அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளை காப்பாற்றுவது தொடர்பாக, கஸ்துாரி ரங்கன் அறிக்கையை செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தை உணர்த்தியுள்ளது.'உலக அளவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கிறது. எதிர்காலத்தில் ஏற்படும் அபாயத்தை உணர்ந்து, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால் வருங்கால சந்ததியினருக்கு பெரிய அநியாயம் செய்ததாக இருக்கும்' என, கஸ்துாரி ரங்கன் கமிட்டி பல ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்திருந்தது.

சுற்றுச்சூழல் பகுதி

கஸ்துாரி ரங்கன் அறிக்கைப்படி, கர்நாடகாவின் 20,668 சதுர கி.மீ., அளவிலான பகுதிகள், பாதுகாக்கப்பட வேண்டிய சுற்றுச்சூழல் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில், அரசு ஆர்வம் காண்பிக்கவில்லை.இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன், குடகில் நிலச்சரிவு ஏற்பட்டது. விஞ்ஞானிகள் ஆய்வு செய்து, நிலச்சரிவுகளுக்கான காரணங்களை பட்டியலிட்டனர். இதில் அரசோ, மக்கள் பிரதிநிதிகளோ அக்கறை காண்பிக்கவில்லை. வளர்ச்சி திட்டங்கள் பெயரில், காடுகள் அழிக்கப்படுகின்றன.வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு அசம்பாவிதம், கர்நாடகாவுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை பாதுகாக்க வேண்டும். வேறு இடங்களில் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். அப்போதுதான் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மீதான அழுத்தம் குறையும். பாதுகாக்கப்பட்ட இயற்கை பகுதிகளில், வளர்ச்சி பணிகளை செய்யக்கூடாது. அப்படி செய்தால் வயநாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள், கர்நாடகாவிலும் ஏற்படும்.

குடிநீருக்கு பிரச்னை

'மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை காப்பாற்றா விட்டால் குடிநீருக்கும் பிரச்னை ஏற்படும்' என, வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே கூறியதாவது:அசம்பாவிதங்கள் நடக்க, பல காரணங்கள் உள்ளன. இதில் சாலை அகலப்படுத்துவது, முக்கிய காரணமாகும். தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பொதுப்பணித் துறை சரியான விதிமுறைகளை பின்பற்றவில்லை. இது குறித்து, நோட்டீஸ் அனுப்பப்பட்டது.கஸ்துாரி ரங்கன் அறிக்கையில் என்ன உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து, முதல்வர் மற்றும் அமைச்சரவையில் ஆலோசிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

வல்லுனர்களின் முக்கிய சிபாரிசுகள்:

 மேற்கு தொடர்சி மலைப் பகுதிகளில் சுரங்கம், கல்குவாரி, மணல் தொழிலுக்கு முற்றிலுமாக தடை விதிப்பது அனல் மின் உற்பத்தி நிலையங்கள், காற்றாலைகள் அமைப்பதை தடை செய்ய வேண்டும் தொழிற்சாலைகள் அமைக்கவோ, விஸ்தரிக்கவோ அனுமதி அளிக்க கூடாது 20,000 சதுர அடி பரப்பளவுள்ள கட்டடங்கள், 50 ஏக்கர் பரப்பளவில் டவுன்ஷிப் அமைக்க வாய்ப்பளிக்க கூடாது நீர் மின் உற்பத்தி திட்டங்கள், பரஸ்பரம், 3 கி.மீ., இடைவெளியில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ