உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., போராட்டத்தில் மாஜி எம்.எல்.சி., மரணம்

பா.ஜ., போராட்டத்தில் மாஜி எம்.எல்.சி., மரணம்

ஷிவமொகா: காங்கிரஸ் அரசை கண்டித்து, ஷிவமொகாவில் நடந்த போராட்டத்தில், பா.ஜ., முன்னாள் எம்.எல்.சி., பானுபிரகாஷ், திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, ஷிவமொகாவில் பா.ஜ.,வினர் நேற்று, காங்கிரஸ் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். ஷிவமொகா நகரின் கோபி சதுக்கத்தில், அமர்ந்து கொண்டு, 'ரகுபதி ராகவ ராஜாராம்' என்ற பஜனை பாடினர். அப்போது, அக்கட்சி எம்.எல்.சி., அருண், குதிரையில் வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.ஷிவமொகா எம்.எல்.ஏ., சென்னபசப்பா தலைமையில், அரசு இறந்து விட்டது என்று கூறி, ஸ்கூட்டருக்கு பாடை கட்டி எடுத்து செல்வது போன்று வினோதமான முறையில் போராட்டம் நடத்தினர்.அப்போது, மூத்த ஆர்.எஸ்.எஸ்., பிரமுகரும், முன்னாள் எம்.எல்.சி.,யுமான பானுபிரகாஷ், 69, பா.ஜ., கொடியை கையில் ஏந்தியபடி, காங்கிரஸ் அரசை கண்டித்து, ஆவேசமாக கோஷம் எழுப்பியவாறு சென்று கொண்டிருந்தார்.எதிர்பாராத விதமாக திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள், அவருக்கு தண்ணீர் கொடுத்து குடிக்க வைத்தனர். அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவித்தனர்.உடனே ஷிவமொகாவில் பா.ஜ., போராட்டம் நிறுத்தப்பட்டது. அனைவரும் மருத்துவமனை முன் சோகத்தில் குவிந்தனர். அவருக்கு மனைவி, மகன் ஹரிகிருஷ்ணா உள்ளனர்.பானுபிரகாஷ் மறைவுக்கு, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ், மாநில தலைவர் விஜயேந்திரா உட்பட ஏராளமான பா.ஜ., தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.முன்னாள் முதல்வர் பங்காரப்பாவையும்; கே.ஜே.பி.,யில் இருந்து எடியூரப்பாவையும் பா.ஜ.,வுக்கு வரவழைத்ததில், பானுபிரகாஷின் பங்கு முக்கியமானது. அவரது இறுதி சடங்கு, ஷிவமொகாவில் மத்துார் கிராமத்தில், நேற்று மாலை 6:00 மணிக்கு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி