உத்தர கன்னடா: தங்களுக்கு யாரும் பெண் கொடுப்பதில்லை என்று வருந்தும் விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், விவகாரத்தான ஆண்கள், எச்.ஐ.வி., பாதித்தவர்களுக்கு வசதியாக, உத்தர கன்னடா மாவட்ட நிர்வாகம் 'ஜீவன சங்கமம்' என்ற இணையதளத்தை துவக்கி உள்ளது.இன்றைய பொருளாதார நிலையில், உலகிற்கு உணவளிக்கும் விவசாயிகளின் மகன்கள், மாற்றுத்திறனாளிகள், விவாகரத்தான ஆண்கள், எச்.ஐ.வி., பாதித்தவர்களுக்கு மணமகள் கிடைப்பதில்லை. பலரும் பெண் கொடுக்க தயங்குகின்றனர்.குறிப்பாக, விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு பெண் கிடைப்பதில் அதிக சிரமம் உள்ளது. இது பற்றி இளைஞர்கள் சிலர், முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.சில நாட்களுக்கு முன்பு, கொப்பாலில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு முகாமில் பங்கேற்ற மாவட்ட கலெக்டரிடம், 'எனக்கு 10 ஆண்டுகளாக திருமணம் நடக்கவில்லை. பெண் தருவதற்கு மறுக்கின்றனர். எனவே, எனக்கு திருமணம் செய்து வையுங்கள்' என இளைஞர் ஒருவர் மனுக் கொடுத்திருந்தார்.இந்நிலையில், உத்தர கன்னடா மாவட்ட நிர்வாகம், மாவட்ட இளைஞர்களுக்காக 'ஜீவன சங்கமம்' என்ற இணையதளம் துவக்கி உள்ளது.இதில், திருமணமாகாத விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், விவாகரத்து பெற்ற ஆண்கள், எச்.ஐ.வி., பாதிப்பு உள்ளவர்கள், தங்கள் பெயரை பதிவு செய்து, தங்களுக்கு தகுந்த வரனை தேர்வு செய்து கொள்ளலாம்.பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். திருமண பொருத்தத்தின் நோக்கத்துக்காக மட்டுமே இத்தகவல்கள் பயன்படுத்தப்படும். இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.