| ADDED : ஜூன் 12, 2024 11:09 PM
பெங்களூரு: குடும்ப தலைவியருக்கு, 2,000 ரூபாய் வழங்கும், 'கிரஹலட்சுமி' திட்டம், வரும் நாட்களில் திருநங்கையருக்கும் விஸ்தரிக்கப்படுகிறது.இது குறித்து, மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் கூறியதாவது:கர்நாடக காங்கிரஸ் அரசு, குடும்ப தலைவியருக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும், 'கிரஹலட்சுமி' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தற்போது, இந்த திட்டத்தை திருநங்கையருக்கும் விஸ்தரிக்க அரசு முடிவு செய்துள்ளது.வரும் ஜூலை மாதம் முதல், திரு நங்கையருக்கும் இத்திட்டத்தின் பலன் கிடைக்கும். இது குறித்து, அரசு அதிகாரபூர்வமாக உத்தரவு பிறப்பித்துள்ளது. திட்டத்தின் பயனாளிகளாக, ஜூன் இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள அடையாள அட்டையை சமர்ப்பித்து, கிரஹ லட்சுமி திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். கர்நாடகாவில் 40,000க்கும் மேற்பட்ட திருநங்கையர் உள்ளனர். இவர்களின் வாழ்க்கைக்கு இந்த திட்டம் உதவியாக இருக்கும். பெங்களூரு ஒன், கிராம ஒன், சைபர் சென்டர்களில் இம்மாதம் இறுதிக்குள் விண்ணப்பித்தால், ஜூலை முதல் பணம் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.