உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கனமழையால் 11 மாவட்டங்கள் பாதிப்பு அசாமில் 30,000 பேர் முகாம்களில் தஞ்சம்

கனமழையால் 11 மாவட்டங்கள் பாதிப்பு அசாமில் 30,000 பேர் முகாம்களில் தஞ்சம்

குவஹாத்தி: அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், 11 மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்துள்ளன. வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கித் தவித்த 30,000 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, மணிப்பூரில், 'ரேமல்' புயலுக்கு பின் கனமழை பெய்து வருகிறது. அசாமில் பெய்து வரும் கனமழையால், 11 மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்துள்ளன. மழை, வெள்ளம் காரணமாக சாலைகள், ரயில் தண்டவாளங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட சச்சார் மாவட்டத்தில் மோசமான வானிலை நிலவியதால் நேற்று கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. ஆனால், தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்பட்டன.கர்பி அங்க்லாங், தேமாஜி, ஹோஜாய், சச்சார், கரிம்கஞ்ச், திப்ருகர், நாகன், ஹைலகண்டி, கோலகாட், மேற்கு கர்பி அங்கலாங் மற்றும் திமா ஹசோ ஆகிய 11 மாவட்டங்களில் பெய்த கனமழை, வெள்ளத்தில் சிக்கி 3.5 லட்சம் பேர் பாதிப்புஅடைந்துள்ளனர். வீடுகளில் சிக்கித் தவித்த 30,000 பேரை மீட்புப்படையினர் மீட்டு, முகாம்களில் தங்க வைத்துள்ளனர். மே 28 முதல் வீசிய புயல், மழை, வெள்ளம் போன்றவற்றில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இடைவிடாது பெய்யும் கனமழையால் பராக் பள்ளத்தாக்கு, திமா ஹசோ பகுதிகளில் சாலை மற்றும் தண்டவாளங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுஉள்ளது. அசாமை மேகாலயாவுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், வாகனங்கள் செல்ல முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வடகிழக்கு எல்லை ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், ரேமல் புயல் காரணமாக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதாகவும், தொடர்ந்து இடியுடன் கூடிய பலத்த மழை, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே துவங்கியுள்ளது. மே 30ல் துவங்கிய பருவமழை கடந்த இரு நாட்களாக தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் மாவட்டங்களின் சில பகுதி களில் கனமழை பெய்கிறது. இதனால், இடுக்கி மாவட்டத்தின் பூச்சப்ரா மற்றும் கொலப்பரா பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மரங்களும் வேரோடு சாய்ந்துள்ளதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி சில வீடுகள் இடிந்தன; வாகனங்கள் சேதமடைந்து உள்ளன. மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், தொடுபுழா - புலியன்மலா பகுதிகளில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இடுக்கியில் உள்ள மலங்கரா அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பால் தொடுபுழா, மூவாட்டுபுழா ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கோட்டயத்தின் பல பகுதிகளில் வெள்ளம் தேங்கியிருப்பதால் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ