பெங்களூரு, : பெங்களூரில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. புகார்கள் தெரிவிக்க உதவி எண்களை, பெங்களூரு மாநகராட்சி அறிவித்துள்ளது.பெங்களூரில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. பெங்களூரில் 100க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. தாழ்வு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இந்நிலையில் நேற்று மதியம் கருமேங்களுடன் காணப்பட்ட வானம், மாலையில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.மாதநாயகனஹள்ளி, மாகாளி, மச்சோஹள்ளி, டவுன்ஹால், கே.ஆர்.,மார்க்கெட், லால்பாக், சாளுக்கியா சதுக்கம், விதான் சவுதா, ஆர்.ஆர்.நகர், உத்தரஹள்ளி ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான மரங்கள் விழுந்துள்ளன. மரங்களை வனத்துறையினர் அகற்றி வருகின்றனர். இது தொடர்பாக புகார் தெரிவிக்க, '1533' என்ற உதவி எண்ணை மாநகராட்சி அறிவித்துள்ளது.கடலோர மாவட்டமான உத்தர கன்னடாவில் நேற்றிரவு இடியுடன் கூடிய மழை பெய்தது. பாகல்கோட், கதக், கொப்பால், ராய்ச்சூர், விஜயபுரா, பல்லாரி, சிக்கமகளூரு, தாவணகெரே ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசியது.தட்சிண கன்னடா, உடுப்பி, பெலகாவி, பீதர், தார்வாட், ஹாவேரி, கலபுரகி, யாத்கிர், பெங்களூரு ரூரல், பெங்களூரு நகரம், சாம்ராஜ் நகர், சிக்கபல்லாபூர், ஹாசன், குடகு, கோலார், மைசூரு, ராம்நகர், ஷிவமொகா, துமகூரு, விஜயநகரா மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.