| ADDED : மே 04, 2024 10:45 PM
புதுடில்லி : லோக்சபா தேர்தல் நடைமுறைகளை காண ரஷ்யா, ஆஸ்திரேலியா உட்பட 23 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச பார்வையாளர்கள் வந்துள்ளனர். உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக, நம் நாட்டில் நடைபெறும் லோக்சபா தேர்தல் கருதப்படுகிறது. இத்தேர்தல், நாடு முழுதும் கடந்த மாதம் 19ம் தேதி துவங்கிய நிலையில், வரும் ஜூன் 1ம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடக்கவுள்ளது. நாளை மறுதினம் 12 மாநிலங்களில் உள்ள 94 லோக்சபா தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டத்தேர்தலில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், இதற்கான ஏற்பாடுகளை காணும் வகையில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்கள் நம் நாட்டுக்கு வந்துள்ளனர். ஆஸ்திரேலியா, இலங்கை, நேபாளம், வங்கதேசம், ஜிம்பாப்வே, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், சிலி, மாலத்தீவுகள் உட்பட 23 நாடுகளைச் சேர்ந்த 75 சர்வதேச பார்வையாளர்கள் நேற்று முதல் தேர்தல் பணிகளை பார்வையிட துவங்கி உள்ளனர். இவர்கள், மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ஆறு குழுக்களாக பிரிந்து சென்று பல்வேறு தொகுதிகளில் தேர்தல் மற்றும் அது தொடர்பான முன்னேற்பாடு பணிகளை வரும் 9ம் தேதி வரை நேரில் சென்று பார்வையிட உள்ளனர்.