ஹூப்பள்ளி : தார்வாட் லோக்சபா தொகுதியில் உள்ள இளம் வாக்காளர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து, கட்டாயம் ஓட்டு போடும்படி தேர்தல் கமிஷன் சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.கர்நாடகாவில் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு, வரும் 7ல் நடக்கவுள்ளது. இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவுக்கு, சிறப்பு ஓட்டுச்சாவடிகளை ஹூப்பள்ளி - தார்வாட் மாவட்ட நிர்வாகம் அமைத்து வருகிறது.தார்வாட் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 1,600 ஓட்டுச்சாவடிகளில், 63 சாவடிகள் சிறப்பு கருத்துடன் அமைக்கப்பட்டுள்ளன.நவல்குந்த், குந்த்கோள், தார்வாட், ஹூப்பள்ளி - தார்வாட் மேற்கு, ஹூப்பள்ளி - தார்வாட் சென்ட்ரல், கலகடகி தொகுதிகளில் தலா ஐந்து மகளிர் ஓட்டுச்சாவடிகள் உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு ஓட்டுச்சாவடி உள்ளது.தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:தார்வாட் சிறப்பு ஓட்டுச்சாவடி ஒன்றில், 'தார்வாட் பேடா' ஓவியம் வரையப்பட்டுள்ளது.கலகடகி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, ஓட்டுச்சாவடியில் லம்பானி சமுதாய சம்பிரதாய உடை ஓவியம் வரையப்பட்டுள்ளது. இதுபோன்று அந்தந்த பகுதிகளின் முக்கியமான பொருட்கள், இடங்களின் ஓவியங்கள் வரைந்து, ஓட்டுச்சாவடிகள் அழகாக காணப்படுகின்றன.ஒவ்வொரு ஓட்டுச்சாவடிகளிலும், 'நானும் என் ஓட்டும் விற்பனைக்கு இல்லை, என் ஓட்டு - என் குரல், என் ஓட்டு - என் சக்தி, ஓட்டு போடுவது உங்கள் உரிமை - உங்கள் பொறுப்பு' உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இதன் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.தேர்தல் கமிஷன் உத்தரவுபடி, ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது. குடிநீர், கழிப்பறை உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.தார்வாட் லோக்சபா தொகுதியில், 40,000 இளம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு ஓட்டுப்பதிவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அழைப்பிதழ் கொடுத்து, கட்டாயம் ஓட்டு போடும்படி அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.