உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நான் முதல்வர் பதவியில் நீடிப்பது உங்கள் கையில்! சொந்த தொகுதி மக்களிடம் சித்தராமையா உருக்கம்

நான் முதல்வர் பதவியில் நீடிப்பது உங்கள் கையில்! சொந்த தொகுதி மக்களிடம் சித்தராமையா உருக்கம்

மைசூரு : ''நான் முதல்வராக தொடர வேண்டுமா, வேண்டாமா என்பது உங்கள் கைகளில் தான் உள்ளது. மைசூரு, சாம்ராஜ்நகர் லோக்சபா தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், எனது பலம் அதிகரிக்கும். இதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்,'' என, தன் சொந்த தொகுதியான வருணாவில் நேற்று முதல்வர் சித்தராமையா உருக்கமாக பேசினார்.மைசூரு மாவட்டத்தில் உள்ள வருணா சட்டசபை தொகுதி, சாம்ராஜ்நகர் லோக்சபா தொகுதிக்குள் வருகிறது. வருணா சட்டசபை தொகுதி, 2008ல் உருவானது. 2008, 2013 ஆகிய இரண்டு முறையும் முதல்வர் சித்தராமையா வெற்றி பெற்றார்.இதையடுத்து, 2018ல் அவரது மகன் யதீந்திரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2023ல் மீண்டும் சித்தராமையா வெற்றி பெற்றார்.

பொருளாதாரம்

சாம்ராஜ்நகர் லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுனில் போசுக்கு ஆதரவாக, முதல்வரின் வருணா சட்டசபை தொகுதியில் நேற்று காங்., பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்தில், முதல்வர் சித்தராமையா பேசியதாவது:காங்கிரஸ் வாக்குறுதித் திட்டங்களால், பெண்களின் பொருளாதார நிலை உயர்ந்துள்ளது. உழைக்கும் பெண்களின் வர்க்கம் அதிகரித்துள்ளது. ஆண்களுக்கு பணம் மிச்சமாகிறது.சாதாரண மக்களுக்கு பணம் கிடைக்கும் வகையில் திட்டம் வகுத்து, வாங்கும் திறனை உருவாக்கியுள்ளோம். வாக்குறுதித் திட்டங்களை எதிர்க்கும் பா.ஜ.,வினரும் எங்கள் பயனாளிகளே.

டயலாக் போதுமா?

பிரதமர் நரேந்திர மோடி, சொன்னபடி செயல்பட்டுள்ளாரா? நாட்டு மக்கள் நலனுக்காக என்ன திட்டம் வகுத்துள்ளார்? நல்ல நாள் வந்துவிட்டது என்று டயலாக் சொன்னால் போதுமா? இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையுமா?நான் 56 அங்குலம் மார்பு கொண்டவன் என்று சொன்னால் போதாது. இதயத்தில் தாய் உள்ளம் இருக்க வேண்டும். அவர் அளித்த வாக்குறுதிப்படி, வேலை வாய்ப்பு உருவாகவில்லை. விவசாயிகளின் ஆதாயம் இரட்டிப்பு ஆகவில்லை.மோடி மீண்டும் பிரதமரானால், நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியிருந்தார். தற்போது அவரது கட்சி பா.ஜ.,வில் இணைந்துள்ளது. ஏன் இந்த நாடகம்?நான் முதன் முறையாக முதல்வராக பதவியேற்றது, பசவ ஜெயந்தி அன்று. இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றதும், பசவண்ணாவை கலாசார தலைவராக அறிவித்தோம். அவர் ஒரு சமுதாயத்துக்கு சேர்ந்தவர் அல்ல. ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் சொந்தக்காரர்.

அதிர்ஷ்ட தொகுதி

வருணா சட்டசபை தொகுதி, எனக்கு அதிர்ஷ்டமான தொகுதி. உங்களால் தான் எனக்கு இரண்டு முறை முதல்வர் பதவி கிடைத்துள்ளது. இதற்காக தொகுதி மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை விட அதிக ஓட்டு வித்தியாசத்தில், சுனில் போசை வெற்றி பெற செய்ய வேண்டும். மைசூரு, சாம்ராஜ்நகர் லோக்சபா தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும்.நான் முதல்வராக தொடர வேண்டுமா, வேண்டாமா என்பது உங்கள் கைகளில் தான் உள்ளது. இரண்டு தொகுதிகளில் வெற்றால், என் பலம் அதிகரிக்கும். இதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.அமைச்சர்கள் மஹாதேவப்பா, வெங்கடேஷ், முதல்வரின் மகன் யதீந்திரா, சாம்ராஜ்நகர் காங்., வேட்பாளர் சுனில் போஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஏப் 02, 2024 11:52

நீங்கள் முதல்வராக கர்நாடக மக்களுக்கு என்ன செய்து கிழித்தீர்கள், கூறமுடியுமா? நீங்கள் முதல்வராக பதவி வகித்தது போதும் சாமி, வீட்டுக்கு போங்க


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை