உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறைகளில் ஜாமர் பொருத்தியது வீண்; தொடரும் கைதிகள் போன் பயன்பாடு

சிறைகளில் ஜாமர் பொருத்தியது வீண்; தொடரும் கைதிகள் போன் பயன்பாடு

பெங்களூரு: கர்நாடக சிறைகளில் மொபைல் போன் பயன்பாட்டுக்கு கடிவாளம் போடும் நோக்கில், கோடிக்கணக்கான ரூபாய் செலவில் ஜாமர் பொருத்தியும் பயன் இல்லை. சிறைகளில் மொபைல் போன் பயன்பாட்டைத் தடுக்க முடியவில்லை.சிறைகளில் கைதிகள் திருட்டுத்தனமாக மொபைல் போன் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. கைதிகளுக்கு சிறை ஊழியர்களே மொபைல் போன் கொடுப்பதாக கூறப்பட்டது. இதற்கு கடிவாளம் போடும் நோக்கில், பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை, பெலகாவி, விஜயபுரா, தார்வாட், பல்லாரி, ஷிவமொகா, துமகூரு மத்திய சிறைகளில், டி - ஹெச்.சி.பி.எஸ்., எனும், 'டவர்ஸ் ஆப் தி ஹர்மோனீஸ் செல் பிளாக்கிங் சிஸ்டம்' தொழில்நுட்பம் கொண்ட ஜாமர்கள் பொருத்தப்பட்டன. இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டது.இவற்றை நிர்வகிக்க, ஐந்து ஆண்டுகளுக்கு 11.32 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. டி - ஹெச்.சி.பி.எஸ்., டவர்கள், தடை செய்யப்பட்ட பகுதிகளில், மொபைல் போன் சிக்னல் கிடைக்கவிடாமல் தடுக்கும்.இவை பொருத்திய பின்னரும், சிறைகளில் மொபைல் போன் பயன்படுத்துவது நிற்கவில்லை. பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்கள், சமூகவிரோதிகள், கொலை உள்ளிட்ட கடுமையான குற்றங்களில் தண்டனைக்கு ஆளான கைதிகளுக்கு, விசாரணை கைதிகளுக்கு ஸ்மார்ட் போன்கள் எளிதாக கிடைக்கின்றன.சிலர் சிறையில் இருந்து, வெளி உலகுடன் தொடர்பு கொண்டு, முக்கிய புள்ளிகளை மிரட்டி மாமூல் வசூலிப்பது, பயங்கரவாத செயலில் ஈடுபடுவது, கொள்ளையடிக்க கூட்டாளிகளுக்கு சதி திட்டம் தீட்டி கொடுப்பது என, பலவிதமான குற்றங்களை தங்கு தடையின்றி தொடர்கின்றனர்.ரேணுகாசாமி கொலை வழக்கில், கைதாகி பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த நடிகர் தர்ஷன், ரவுடிகள் மொபைல் போன் பயன்படுத்திய வீடியோ, போட்டோ வெளியாகி அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கம் கேட்டு, சிறைத்துறை டி.ஜி.பி., மாலினி கிருஷ்ண மூர்த்திக்கு, உள்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.சிறையில் கைதிகள் மொபைல் போன் பயன்படுத்துவதை தடுக்க, கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டு, மொபைல் ஜாமர் பொருத்தப்பட்டது. ஆனால், அவை பயனளிக்கவில்லை. கைதிகள் மொபைல் போன் பயன்படுத்துவதையும் தடுக்க முடியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !