| ADDED : மே 04, 2024 01:44 AM
திருவனந்தபுரம், கேரளா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில், இன்று மற்றும் நாளை, 'கள்ளக்கடல்' நிகழ்வுக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எந்த விதமான அறிகுறியுமின்றி திடீரென கடல் சீற்றம் அடைவது, 'கள்ளக்கடல்' நிகழ்வு என்றழைக்கப்படுகிறது. திருடனை போல சற்றும் எதிர்பாராத தருணத்தில் வருவதால், கேரள மக்கள் இதை, கள்ளக்கடல் என அழைக்கின்றனர்.இந்நிலையில் நேற்று, கேரள பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கேரளா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று மற்றும் நாளை, கள்ளக்கடல் நிகழ்வுக்கு வாய்ப்பு இருப்பதாக, இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்த நிகழ்வு, இன்று அதிகாலை 2:30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 11:30 மணி வரை ஏற்பட வாய்ப்புள்ளதால், 'ரெட் அலர்ட்' பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இந்த கால கட்டத்தில் மிக வலுவான அலைகள், கடல் சீற்றம் மற்றும் கடல் உள்வாங்கல் போன்றவற்றுக்கு வாய்ப்பு உள்ளது. எனினும், இது சுனாமி போன்ற நிகழ்வு அல்ல. மீனவர்கள் தங்கள் மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பொது மக்கள் கடற்கரைக்கு செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.