| ADDED : ஏப் 18, 2024 04:22 AM
மைசூரு : ''காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தேசிய அரசியலுக்கு கொண்டு செல்லாவிட்டால், பா.ஜ.,வில் இணைந்து விடுவேன் என்று காங்கிரஸ் மேலிடத்தை, சித்தராமையா மிரட்டினார்,'' என முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.மைசூரில் நேற்று குமாரசாமி அளித்த பேட்டி:காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தேசிய அரசியலுக்கு கொண்டு செல்லா விட்டால், பா.ஜ.,வில் இணைந்து விடுவேன் என்று காங்கிரஸ் மேலிடத்தை, சித்தராமையா மிரட்டினார். மற்ற சமுதாய தலைவர்களின் வளர்ச்சியை, சித்தராமையா ஒருபோதும் பொறுத்து கொள்ள மாட்டார்.பெங்களூரு கிராமப்பகுதியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, மாற்றத்தை பார்த்து, சிவகுமாரின் பேச்சு மாறிவிட்டது. தற்போது காங்கிரசின் இலக்கு குமாரசாமி தான்.மைசூரு மாவட்டத்தில் தனி நபர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை சிவகுமாரே முன்னர் கூறியுள்ளார். சித்தராமையாவிடம் இருந்து ஒக்கலிகாவுக்கு பாதுகாப்பு கிடைக்கவில்லை. இச்சமூக மக்களுக்கு முதல்வரே அநீதி இழைத்துள்ளார் என்பதே சிவகுமார் பேசிய பேச்சின் அர்த்தம்.பரமேஸ்வர் வெற்றி பெற்றால், முதல்வராகும் வாய்ப்பு இருந்தது. ஆனால், அவரை தோற்கடித்தது யார். லோக்சபா தேர்தலில் கூட்டணி வேட்பாளருக்கு ஒக்கலிகர்களின் 85 - 90 சதவீதம் பேர் ஆதரவாக உள்ளனர்.ஆதிசுஞ்சனகிரி மடத்தின் நிர்மலானந்தநாத சுவாமிகளின் தொலைபேசியை நான் எதற்கு ஒட்டு கேட்க வேண்டும். அவர் மீது எனக்கு சந்தேகம் இருந்தால், அவருடன் ஏன் அமெரிக்கா செல்ல வேண்டும். ஆட்சி கவிழும் என்று யாரும் சொல்லவில்லை. 'நீங்கள் எந்த குழப்பமும் இன்றி சென்று வாருங்கள்' என கூறி காங்கிரசார் அனுப்பி வைத்தனர்.நான் முதல்வராக இருந்தபோது யாருடைய தொலைபேசியையும் ஒட்டு கேட்கவில்லை. கூட்டணி ஆட்சி அமைந்த 15 நாட்களில், ரமேஷ் ஜார்கிஹோளி, சிவகுமாருக்கு இடையே ஏன் சண்டை வந்தது என்பதை சொல்லட்டும். பொய் சொல்லி அரசியல் செய்வது சிவகுமாரின் ரத்தத்தில் கலந்துள்ளது. தேர்தலுக்கு பின் அனைத்தும் சரியாகிவிடும்.ராகுலின் முக்கால் மணி நேர பேச்சு, எந்த மாற்றத்தையும் கொண்டு வராது. பணத்தின் ஆணவத்தாலும், பேராசையாலும் நான் தோற்றுவிடுவேன் என்கின்றனர். மாண்டியா மக்களை காசு கொடுத்து வாங்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.