ஓவிய கலையை ஊக்குவிக்க லலிதகலா அகாடமி திட்டம்
பெங்களூரு:ஓவியக்கலையை ஊக்கப்படுத்தும் நோக்கில், கர்நாடகா முழுதும் 600, 'கலை மையம்' துவங்க, லலிதகலா அகாடமி திட்டமிட்டுள்ளது. மைசூரில் முதலில் துவக்கப்படுகிறது.கர்நாடக லலிதகலா அகாடமி தலைவர் குமார் கூறியதாவது:பள்ளி மாணவர்களுக்கு, ஓவியக்கலையில் ஆர்வத்தை ஏற்படுத்த கர்நாடக லலிதகலா அகாடமி முடிவு செய்துள்ளது. இதற்காக கலை மையம் அமைக்க தயாராகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், சராசரியாக 20 மையங்கள் அமைக்கப்படும். இவற்றின் மூலம் மாணவர்களுக்கு ஓவியக்கலையில் ஊக்கம் அளிக்கப்படும்.சோதனை முறையில் மைசூரு, பெங்களூரு, மங்களூரு, ஹாசன், துமகூரில் கலை மையம் திறக்கப்படும். அதன்பின் கட்டம், கட்டமாக மாநிலம் முழுதும் விஸ்தரிக்கப்படும். தற்போது மைசூரில் கலை மையம் அமைக்க தயாராகிறோம்.சங்கீதம், நாட்டியம், இலக்கியம் மக்களை அதிக அளவில் சென்றடைந்தன. ஆனால் ஓவியக்கலை பெருமளவில் மக்களை சென்றடையவில்லை. ஓவியக்கலையில் மக்களுக்கு ஆர்வம் இல்லாததால், சரியான ஊக்கம் கிடைக்கவில்லை. எனவே ஓவிய மையங்கள் அமைக்க, அகாடமி முடிவு செய்துள்ளது.ஓவியக்கலைக்கு ஊக்கமளிக்கும் தனியார் அமைப்புகள், சங்கங்கள், கல்வி நிறுவனங்கள் ஒருங்கிணைப்பில், கலை மையங்கள் அமைக்கப்படும். அரசு அல்லது தனியார் கட்டடத்தில் மையம் இயங்கும். அரசு, தனியார் தொடக்க பள்ளிகள், நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு ஓவிய வகுப்புகள் நடத்தப்படும்.கலை கல்லுாரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், இந்த கலை மையங்களில், ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர். இவர்களுக்கு கவுரவ நிதி வழங்கப்படும். மாணவர்களுக்கு இலவசமாக ஓவிய பயிற்சி அளிக்கப்படும். வாரத்தில் நான்கு நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். காலை முதல் மதியம் வரை, ஓவிய வகுப்புகள் இருக்கும். ஓவிய பயிற்சிக்கு தேவையான அனைத்து சாதனங்களையும், அகாடமி வழங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.