உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிக்கட்டுமா... போகட்டுமா... தவியாய் தவிக்கும் சீனிவாச பிரசாத்

நிக்கட்டுமா... போகட்டுமா... தவியாய் தவிக்கும் சீனிவாச பிரசாத்

எம்.பி., சீனிவாச பிரசாத், பா.ஜ.,வை கைவிடவும் முடியாமல், காங்கிரசுக்கு ஆதரவும் தெரிவிக்க முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாய் தவிக்கிறார்.காங்கிரசில் அமைச்சராக இருந்த சீனிவாச பிரசாத், சித்தராமையா மீதான அதிருப்தியில், கட்சியை விட்டு விலகினார். பா.ஜ.,வில் இணைந்தார். 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிட அவருக்கு விருப்பம் இருக்கவில்லை. கட்சி மேலிடத்தின் உத்தரவுக்கு பணிந்து, சாம்ராஜ்நகர் தொகுதியில் போட்டியிட்டார். வெற்றி பெற்று எம்.பி.,யும் ஆனார்.

போட்டியிட ஆர்வம்

இம்முறை லோக்சபா தேர்தலில், அவருக்கு சீட் கொடுக்க, பா.ஜ., மேலிடம் தயாராக இருந்தும், வயது மற்றும் உடல் ஆரோக்கியம் காரணமாக, அரசியல் ஓய்வு அறிவித்தார். அவரது மருமகன்கள் மோகன் அல்லது ஹர்ஷ வர்தனுக்கு, சாம்ராஜ்நகர் தொகுதியில் சீட் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. மோகன் போட்டியிட ஆர்வமாக இருந்தார்.ஆனால் கொள்ளேகாலின் முன்னாள் எம்.எல்.ஏ., பாலராஜுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றமடைந்த மோகன், காங்கிரசில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்போதே அந்த கட்சிக்குச் சென்றால், அடுத்த சட்டசபை தேர்தலில் சீட் கிடைக்கும் என, மோகன் கருதுகிறார்.ஒரு காலத்தில் தனது கோட்டையாக இருந்த மைசூரு, சாம்ராஜ்நகர் ஆகிய தொகுதிகளை கைப்பற்ற, காங்கிரஸ் உறுதிபூண்டுள்ளது.குறிப்பாக முதல்வர் சித்தராமையா, மைசூரில் சொகுசு விடுதியில் தங்கி, தேர்தல் வியூகம் வகுக்கிறார். அரசியல் ஓய்வு அறிவித்த சீனிவாச பிரசாத்தின் ஆதரவை பெற, முதல்வர் முயற்சிக்கிறார். காங்கிரசை ஆதரிக்கும்படி சிலரை துாது அனுப்பியுள்ளார்.அது மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தை விசாரிக்கும் பொருட்டு, தொலைபேசியில் சீனிவாச பிரசாத்துடன் பேசிய முதல்வர், காங்கிரசுக்கு ஆதரவளிக்கும்படி கோரினார்.இதனால் பா.ஜ.,வை கை கழுவும் முடியாமல், காங்கிரசை ஆதரிக்கவும் முடியாமல் சீனிவாச பிரசாத் தவிக்கிறார்.அரசியலுக்கு முழுக்கு போட்ட அவர், 'லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்யமாட்டேன்' என, அறிவித்துள்ளார். இவரது மருமகன் மோகன், காங்கிரசில் இணைய ஆலோசிக்கிறார். மற்றொரு மருமகன் ஹர்ஷ வர்தன் பா.ஜ.,வில் இருக்கிறார். இவர் இக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.,

ஆலோசனை

இத்தகைய சூழ்நிலையில், காங்கிரசை ஆதரித்தால், ஹர்ஷ வர்தனுக்கு துரோகம் செய்ததாக ஆகும். இவரது அரசியல் எதிர்காலம் பாதிக்கும். பா.ஜ.,வுக்கு ஆதரவளித்தால் மோகன் எரிச்சலடைவார். இரண்டு மருமகன்களில், யாருக்கு ஆதரவாக நிற்பது என்பது குறித்து முடிவெடுக்க முடியாமல், சீனிவாச பிரசாத் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்.இந்நிலையில் சாம்ராஜ்நகர் தொகுதியில், சீட் எதிர்பார்க்கும் சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பாவின் மகன் சுனில் போசிடம், இப்பகுதியின் செல்வாக்குமிக்க தலைவர் சீனிவாச பிரசாத்தை சந்திக்கும்படி, முதல்வர் உத்தரவிட்டார். இதன்படி சுனில் போசும், சீனிவாச பிரசாத்தை நேற்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.இரண்டு மருமகன்கள், தனித்தனி கட்சிகளில் இருப்பதால், சீனிவாச பிரசாத் எந்த கட்சிக்கும் ஆதரவளிக்காமல், நடுநிலை வகித்தாலும் ஆச்சர்யப்பட முடியாது.'அரசியலுக்கு முழுக்கு போட்டாலும், என்னை அரசியல் விட மறுக்கிறதே' என, சீனிவாச பிரசாத் அங்கலாய்க்கிறார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்