ஜீவன்பீமா நகர்: வீரபத்ரஸ்வாமி பல்லக்கு உற்சவத்தை ஒட்டி, ஜீவன்பீமாநகர போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், இன்றும், நாளையும் மது விற்பனைக்கு, பெங்., நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா, தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.பெங்களூரு ஜீவன் பீமா நகர போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், வீரபத்ரஸ்வாமி பல்லக்கு உற்சவம், இன்று இரவு முதல், நாளை மதியம் வரை நடக்கிறது.இது குறித்து, பெங்., நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா, நேற்று வெளியிட்ட அறிக்கை:வீரபத்ரஸ்வாமி பல்லக்கு உற்சவத்தில், 30 பல்லக்குகள் பங்கேற்க உள்ளன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இந்த வேளையில், சில சமூக விரோதிகள், மது போதையில், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு, சட்டம் - ஒழுங்கு சீர்குலைக்க வாய்ப்பு உள்ளது.இதன் வாயிலாக சமூகத்தில் அமைதி சீர்குலையும். மேலும், உளவுத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்த போது, அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் வாய்ப்பு இருப்பதால் கூறினர்.இதை தடுக்கும் வகையில், இன்று காலை 6:00 மணி முதல், நாளை மதியம் 1:00 மணி வரை, ஜீவன்பீமா நகர் போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில், நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்கள் தவிர, மற்ற மது கடைகள் மூடும்படியும், மது விற்பனை தடை செய்தும் உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.