மைசூரு : முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊரான மைசூரு கே.ஆர்., அரசு மருத்துவமனையில், 'வீல் சேர்' இல்லாததால், நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.மைசூரு டவுனில் கே.ஆர்., அரசு பொது மருத்துவமனை உள்ளது.நேற்று காலை 70 வயதான மூதாட்டி ஒருவர், மருத்துவமனைக்கு வந்தார். அவரால் நடந்து வர முடியாததால், அவருடன் வந்தவர்கள், மருத்துவமனை ஊழியர்களிடம் சென்று வீல் சேர் தரும்படி கேட்டனர். பிளாஸ்டிக் நாற்காலி
வீல் சேர் இல்லை என்று கூறிய மருத்துவமனை ஊழியர்கள், பிளாஸ்டிக் நாற்காலியை கொடுத்து அனுப்பினர். அந்த நாற்காலியில் அமர வைத்து மூதாட்டியை, அவருடன் வந்தவர்கள் துாக்கிச் சென்றனர். இதை சிலர் மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.பின், மைசூரு சாமராஜா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹரிஷ் கவுடா மருத்துவமனைக்குச் சென்றார். மருத்துவமனையில் டீன் தாட்சாயினி, கண்காணிப்பாளர் ஷோபா ஆகியோரிடம், “மருத்துவமனையில் வீல் சேர் கூட இல்லையா?” என, கோபமாக கேட்டார்.மருத்துவமனையில் உள்ள ஒரு அறைக்குள் வீல் சேர், ஸ்டிரெச்சர்கள் இருப்பதாக டீனும், கண்காணிப்பாளரும் கூறினர். அந்த அறைக்கு ஹரிஷ் கவுடா சென்றார். அறை பூட்டப்பட்டு இருந்தது. சாவியை கேட்டபோது யாரிடமும் பதில் இல்லை. இதனால் கடும் கோபமடைந்த அவர், பூட்டை உடைக்கும்படி உத்தரவிட்டார். அதிகாரி கண்ணீர்
பூட்டு உடைக்கப்பட்டு, வீல் சேர்கள் வெளியே எடுக்கப்பட்டன. அப்போது கண்காணிப்பாளர் ஷோபாவை, ஹரிஷ் கவுடா திட்டினார். கண்ணீர் விட்ட ஷோபா, பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, அங்கிருந்து புறப்பட்டார். அவரை ஹரிஷ் கவுடா சமாதானப்படுத்தினார்.மைசூரு, முதல்வர் சித்தராமையாவின் சொந்த மாவட்டம். அவரது ஊரில் உள்ள அரசு மருத்துவமனையிலேயே வீல் சேர் இல்லாமல், நோயாளியை பிளாஸ்டிக் நாற்காலியில் தூக்கிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கே.ஆர்., மருத்துவமனை மேம்பாட்டிற்காக அரசு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.