| ADDED : ஜூன் 11, 2024 01:04 AM
ராய்ப்பூர், சத்தீஸ்கரில் சத்னாமி சமூகத்தினரின் வழிபாட்டு தலத்தை இடித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடந்த ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறியதில், கலெக்டர் அலுவகத்திற்கு தீ வைக்கப்பட்டது. சத்தீஸ்கர் மாநிலத்தில் லட்சக்கணக்கான சத்னாமி சமூகத்தினர் உள்ளனர். இவர்கள், பாபா குரு காசிதாஸ் என்பவரின் போதனைகளை பின்பற்றுபவர்கள். இவர்கள் 'ஜெய்த்காம்' என்ற பெயரில் தங்களுக்கான வழிபாட்டு தலங்களை பல்வேறு நகரங்களில் கட்டியுள்ளனர். பலோடா பஜார் மாவட்டம் கிரோத்புரியிலும் சத்னாமி சமூகத்தினர் புனிதமாக கருதும் இந்த வழிபாட்டு தலம் அமைந்துள்ளது.சமீபத்தில் இந்த வழிபாட்டு தலத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சத்னாமி சமூகத்தினர் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் பலோடா பஜார் கலெக்டர் அலுவலகத்தின் முன், நேற்று 3,000க்கும் மேற்பட்டோர் கூடினர்.வழிபாட்டு தலத்தை சேதப்படுத்திய உண்மையான குற்றவாளிகள் இன்னும் வெளியில் சுதந்திரமாக திரிவதாக கூறி, அவர்களை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களை போலீசார் கலைக்க முயன்ற போது, வன்முறை வெடித்தது.வன்முறையாளர்கள் கலெக்டர் அலுவலகம் மற்றும் அந்த வளாகத்தில் இருந்த மற்ற அலுவலகங்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதில் ஏராளமான அரசு ஊழியர்கள் காயமடைந்தனர். போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் வன்முறை கும்பலை விரட்டி அடித்தனர். கலவரத்தை தொடர்ந்து, சத்தீஸ்கர் துணை முதல்வரும், உள்துறை அமைச்சருமான விஜய் சர்மா, வழிபாட்டு தலம் தாக்கப்பட்டது குறித்து விரிவான நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டார். சத்னாமி சமூகத்தினரை அமைதிகாக்கும்படி கேட்டுக்கொண்டார்.