| ADDED : மே 03, 2024 06:50 AM
ஷிவமொகா: ஷிவமொகா காங்., வேட்பாளர் கீதா சிவராஜ்குமாருக்கு ஆதரவாக, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் மயூரா ஜெயகுமார், தமிழர்களிடம் ஓட்டு சேகரித்தார்.ஷிவமொகா தனியார் ஹோட்டலில், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் மயூரா ஜெயகுமார் தலைமையில், நேற்று முன்தினம் இரவு தமிழ் பிரமுகர்களுடன் காங்கிரஸ் தலைவர்கள் பிரசார கூட்டம் நடத்தினர்.காங்., வேட்பாளர் கீதாவின் கணவரும், பிரபல நடிகருமான சிவராஜ்குமார், அக்கட்சியின் மாநில பொதுச்செயலராக உள்ள தமிழரான ரமேஷ் உட்பட ஏராளமான பிரமுகர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், மயூரா ஜெயகுமார் பேசியதாவது:கர்நாடக காங்கிரஸ் அரசு, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 2,000 உட்பட ஐந்து வாக்குறுதி திட்டங்களை, சொன்னபடி அமல்படுத்தி உள்ளது. இத்திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி தரவில்லை.எனவே ஏழைகளுக்கு உதவும் திட்டங்களுக்கு, ஒத்துழைக்கும் அரசு மத்தியில் அமைய வேண்டும். அப்போது தான் ஏழைகளை மேம்படுத்த மாநில அரசால் சுலபமாக செயல்பட முடியும்.இதற்கு மாநிலம் போன்று, மத்தியிலும் இண்டியா கூட்டணி அரசு அமைய வேண்டும். இப்படி அமைந்தால், ஆண்டுக்கு ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மத்திய அரசு சார்பில், தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி தரப்படும். அதாவது, மாநிலம் மற்றும் மத்திய அரசு இணைந்து, ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் 10,333 ரூபாய் வழங்கும்.இவ்வாறு அவர் பேசினார்.சிவராஜ்குமார் பேசுகையில், ''வாக்குறுதி திட்டங்களை அமல்படுத்துவோம் என்று மக்களுக்கு காங்கிரஸ் வாக்குறுதி அளிக்கிறது. நான் என் மனைவி சார்பில் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன். கண்டிப்பாக அனைத்து திட்டங்களும் உங்களுக்கு கிடைக்கும் என்று உறுதியளிக்கிறேன்,'' என்றார்.