ஹாசன் கலெக்டரின் மக்கள் பணி கூட்டுறவு அமைச்சர் நற்சான்றிதழ்
ஹாசன், : “ஹாசன் மாவட்ட கலெக்டர் சத்யபாமா நேர்மையான அதிகாரி, மக்களின் நலனுக்காக பணியாற்றுகிறார்,” என, கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணா பாராட்டு தெரிவித்தார்.ஹாசனில் நேற்று அவர் கூறியதாவது:தேவகவுடா சந்தர்ப்பவாத அரசியல்வாதி. 2019ல் நரேந்திர மோடி பிரதமரானால், நாட்டை விட்டு வெளியேறுவதாக, தேவகவுடா சபதம் செய்திருந்தார். தற்போது வெறும் மூன்று தொகுதிகளுக்காக, தமது மதத்சார்பற்ற கொள்கை விஷயத்தில், சமரசம் செய்து கொண்டது துரதிர்ஷ்டம்.ஹாசன் மாவட்ட கலெக்டர் சத்யபாமா, ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக, அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக, தேர்தல் ஆணையத்திடம் தேவகவுடா புகார் அளித்துள்ளார். இவரை இடமாற்றும்படி கோரியுள்ளார். இவரது புகாரின்படி தேர்தல் ஆணையம், நடவடிக்கை எடுக்கக் கூடாது. ஏனென்றால் சத்யபாமா நேர்மையான அதிகாரி, மக்களின் நலனுக்காக பணியாற்றுகிறார்.சிலர், தங்களை மண்ணின் மைந்தர்கள், விவசாயி மகன் என, கூறிக் கொள்கின்றனர். ஆனால் விவசாயிகளுக்காக, எதையும் செய்யவில்லை. லோக்சபாவில் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காதவர்கள், மக்களுக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் தொந்தரவு கொடுப்பவர்களை, அரசியலில் இருந்து ஒதுக்குங்கள்.லோக்சபா தேர்தலில் ஓட்டுப் போடும்போது, காங்கிரஸ் அரசின் வாக்குறுதித் திட்டங்களை நினைத்துப் பார்க்க வேண்டும். ஹாசன் மக்கள் புத்திசாலிகள்; சரியான முடிவை எடுப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.