உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலீஸ் ஸ்டேஷனுக்கு தீ: மணிப்பூரில் மீண்டும் பதற்றம்

போலீஸ் ஸ்டேஷனுக்கு தீ: மணிப்பூரில் மீண்டும் பதற்றம்

இம்பால்: மணிப்பூர் ஜிரிபாம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், போலீஸ் ஸ்டேஷன் மற்றும் வீடுகள் எரிக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. மணிப்பூரில் உள்ள ஜிரிபாம் மாவட்டத்தில், மாயமான 59 வயது முதியவர், சமீபத்தில் சடலமாக மீட்கப்பட்டார். அப்பகுதியில் செயல்படும் ஒரு குழுவினர், கொடூரமாக தாக்கியதில் அவர் பலியானதாக தகவல் வெளியானது. இதையடுத்து முதியவரின் உறவினர்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஜிரிபாம் பகுதியில் சில கட்டடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து, மாவட்டம் முழுதும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், பராக் நதிக்கரையை ஒட்டிய சோட்டோபேக்ரா பகுதியில் உள்ள புறநகர் போலீஸ் ஸ்டேஷனை ஆயுதமேந்திய ஒரு கும்பல் நேற்று தீ வைத்து எரித்தது. லம்தாய்குனுா, மொதுப்பூர் பகுதிகளில் புகுந்த அவர்கள், அங்குள்ள வீடுகளுக்கும் தீ வைத்தனர். இதில், ஏராளமான வீடுகள் தீயில் கருகின. இருப்பினும், உயிர்ச்சேதம் எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது. தீ வைப்பு சம்பவங்களால் மாவட்டம் முழுதும் பதற்றம் நீடிக்கும் நிலையில், மணிப்பூர் போலீசாரின் கமாண்டோ பிரிவினர் ஜிரிபாம் மாவட்டத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் ஸ்டேஷன்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்