நதிகளை இணைப்பு குறித்த விழிப்புணர்வு நடை பயணம் செய்து வரும் இளைஞருக்கு ஓசூரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.கர்நாடக மாநிலம், ஷிவமொகா மாவட்டத்தை சேர்ந்தவர் யாஷாஸ், 21; இயற்கை ஆர்வலரான இவர், பயோடெக் படித்து கொண்டிருந்தபோது பேசும் திறனை இழந்தார். ஒரு சிவராத்திரியில் மீண்டும் பேச்சுத்திறன் வந்தது. அதன்பின், 'மண் காப்போம், காவேரி கூக்குரல்' இயக்கத்தின் மூலம், மண் வளம் காக்கவும், நதிகளை இணைக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில், 6 முறை, 3,500 கி.மீ., துாரம் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். ஏழாவது முறையாக, 900 கி.மீ., விழிப்புணர்வு நடைபயணத்தை மார்ச், 25ல் தலக்காவிரியில் துவங்கினார். தமிழக எல்லையான ஓசூருக்கு நேற்று வந்தார். சிப்காட் ஹவுசிங் காலனியில், ஈஷா யோகா மைய ஒருங்கிணைப்பாளர் நரசிம்மன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.இதுகுறித்து யாஷாஸ் கூறியதாவது,வறட்சிக்கு தீர்வு காண, நதிகளை இணைத்து, அதிக மரங்களை நட வேண்டும். இதை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொள்கிறேன். பாலக்கோடு, தர்மபுரி, ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர் வழியாக கடலுார் பிச்சாவரத்தில் வரும், 25ல் பயணத்தை நிறைவு செய்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -