புதுடில்லி:தலைநகர் டில்லிக்கு, ஹிமாச்சலப் பிரதேச அரசு வழங்கும் உபரி நீரை திறந்து விட ஹரியானா அரசுக்கு உத்தரவிடக் கோரி டில்லி அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.டில்லியில் இந்த ஆண்டு கோடை வெயில் சுட்டெரிக்கிறது. கடும் வெப்பம் காரணமாக டில்லியில் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது. தேவை அதிகரிப்பு
குடிநீருக்காக டில்லிவாசிகள் லாரி நீரை எதிர்பார்த்து மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர்.இந்நிலையில், டில்லி நீர்வளத் துறை அமைச்சர் அதிஷி சிங், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:தலைநகர் டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் கடும் வெப்ப அலை வீசுகிறது. டில்லியில் வெப்பநிலை 50 டிகிரி செல்ஷியஸை தாண்டி விட்டது. கோடை நேரத்தில் தண்ணீரின் தேவை அதிகரித்துள்ள நிலையில், வழக்கமான அளவு தண்ணீர் கூட கிடைக்காமல் டில்லி மக்கள் அவதிப்படுகின்றனர். பல இடங்களில் குடிநீர் இல்லாமல், மக்கள் மிகவும் அவஸ்தைப்படுகின்றனர். டில்லி அரசு தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படை தேவைகளில் ஒன்றான தண்ணீர், அரசியலமைப்புச் சட்டப்படி மனிதனின் அடிப்படை உரிமையாகவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.கோடை காலத்தில் டில்லியில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, ஹிமாச்சலப் பிரதேச அரசுடன், டில்லி அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.அந்த ஒப்பந்தப்படி டில்லிக்கு உபரிநீர் வழங்க, ஹிமாச்சலப் பிரதேச அரசு ஒப்புக் கொண்டுஉள்ளது. ஆனால், ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்துடன் டில்லிக்கு எல்லை கிடையாது. எனவே, டில்லி எல்லையில் உள்ள ஹரியானா மாநில நீர்வழித்தடம் வாயிலாக வஜிராபாத் தடுப்பணைக்கு தண்ணீர் வர வேண்டும். பா.ஜ., அரசு
ஆனால், இந்த ஆண்டு ஹிமாச்சலில் இருந்து வரும் தண்ணீரை ஹரியானாவில் ஆளும் பா.ஜ., அரசு டில்லிக்கு திறந்து விடவில்லை.டில்லி அரசுடன் ஒத்துழைக்க ஹரியானா அரசு மறுக்கிறது. எனவே, ஹிமாச்சலப் பிரதேசம் வழங்கிய உபரி நீரை வஜிராபாத் அணைக்கு திறந்து விடும்படி ஹரியானா அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த மனு நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என கூறப்படுகிறது.