உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேகதாது திட்டத்துக்கு அடிக்கல்? கர்நாடக காங்., அரசு திட்டம்!

மேகதாது திட்டத்துக்கு அடிக்கல்? கர்நாடக காங்., அரசு திட்டம்!

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்கு முன்பே, மேகதாது திட்டத்துக்கு அடிக்கல் நாட்ட, கர்நாடக காங்கிரஸ் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடக்கின்றன.

பா.ஜ.,வுக்கு ஆதரவு

லோக்சபா தேர்தலில், எதிர்பார்த்த அளவில் தொகுதிகளை கைப்பற்ற முடியாமல் ஏமாற்றமடைந்த, கர்நாடக ஆளுங்கட்சியான காங்கிரஸ், பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் 'கண்' வைத்துள்ளது. பெங்களூரு லோக்சபா தொகுதிகளிலும், பா.ஜ., அமோக வெற்றி பெற்றது. பெங்களூரு மக்கள், பா.ஜ.,வுக்கு ஆதரவாக நிற்கின்றனர். காங்கிரஸ் அரசின் வாக்குறுதி திட்டங்களுக்கு, பெங்களூரு மக்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதை, லோக்சபா தேர்தல் முடிவு உணர்த்தியது.பெங்களூரு மாநகராட்சி ஆட்சியை, தன் வசமாக்க காங்கிரஸ் திட்டம் வகுத்துள்ளது. இதற்காக பெங்களூரு மக்களின் நம்பிக்கையை பெறும் நோக்கில், மேகதாது திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.ராம்நகரின், மேகதாதுவில் அணை கட்டி மழைக்காலத்தில் வீணாகும் தண்ணீரை சேகரித்து, கோடைக் காலத்தில் பயன்படுத்துவதே, மேகதாது திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டம், பெங்களூரு, ராம்நகர் உட்பட நகரங்களுக்கு உதவியாக இருக்கும். இந்த திட்டத்துக்கு, தமிழக அரசு முட்டுக்கட்டை போடுவதால், பல ஆண்டுகளாக மேகதாது திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

பாதயாத்திரை

சட்டசபை தேர்தலுக்கு முன், மேகதாது திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, காங்கிரஸ் பாதயாத்திரை நடத்தியது. லோக்சபா தேர்தல் பிரசாரத்திலும், மேகதாது திட்டத்தை காங்கிரஸ் அஸ்திரமாக பயன்படுத்தியது. நடப்பாண்டு இறுதிக்குள் பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடத்த, காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.அதற்கு முன்னதாக மேகதாது திட்டத்துக்கு அடிக்கல் நாட்ட, அரசு விரும்புகிறது. அடுத்த மூன்று, நான்கு மாதங்களில் திட்டத்தை செயல்படுத்த, சம்பந்தப்பட்ட துறைகளிடம் அனுமதி பெற, அரசு திட்டமிட்டுள்ளது.மேகதாது திட்டம் விஷயத்தில், தமிழகத்தின் மனதை கரைப்பது அவ்வளவு எளிதல்ல. இதில் தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காணும்படி, மத்திய அரசுக்கு கர்நாடக அரசு நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ