உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத அடிப்படையில் இடஒதுக்கீடு கண்டிப்பாக கிடையாது: மோடி

மத அடிப்படையில் இடஒதுக்கீடு கண்டிப்பாக கிடையாது: மோடி

மேடாக், ''நான் உயிருடன் இருக்கும் வரை மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை கண்டிப்பாக கொண்டுவரமாட்டோம்,'' என, பிரதமர் மோடி பேசினார். தெலுங்கானா மாநிலம் மேடாக்கில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி பேசியதாவது:காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 55 சதவீத பரம்பரை சொத்து வரி விதிக்கப்படும் சூழல் உருவாகும். முந்தைய, காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், மற்ற நாடுகள் எல்லாம் பொருளாதார ரீதியாக பலமான நாடாக மாறின. ஆனால், காங்கிரசின் தவறான கொள்கை காரணமாக நம் நாடு வளர்ச்சியில் பின் தங்கியிருந்தது. தே.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வந்தபின் தான், நாடு வளர்ச்சி பாதையில் செல்லத் துவங்கியது. காங்கிரஸ் ஓட்டு வங்கி அரசியல் செய்கிறது. மத ரீதியில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம், அந்த கட்சியிடம் உள்ளது. ஆனால், நான் உயிருடன் இருக்கும் வரை, மத ரீதியிலான இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக கொண்டுவரமாட்டோம். இவ்வாறு அவர் பேசினார். மஹாராஷ்டிராவின் சோலாபூர் மாவட்டத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி பேசியதாவது:காங்கிரஸ் கட்சி, 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்தது. உலகில் வேறு எந்த நாட்டிலும், இதுபோன்ற வாய்ப்பு ஒரு கட்சிக்கு கிடைத்திருந்தால், அந்த நாடு முன்னேறியிருக்கும்.நாங்கள், 2014ல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, மஹாராஷ்டிராவில், 35 உட்பட, 100 வேளாண் நீர்ப்பாசன திட்டங்கள் நிலுவையில் இருந்தன. எங்களுடைய 10 ஆண்டு ஆட்சியில், இதில், 66 திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.விவசாயிகளுக்காக தற்போது காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும் குரல் கொடுக்கின்றன. ஆனால், விவசாய நிலங்களுக்கு பாசன நீரைக் கூட அவர்கள் கொண்டு சேர்க்கவில்லை. மத்திய வேளாண் துறை அமைச்சராக இருந்தபோதும், சரத் பவார், விவசாயிகளின் நலனுக்காக எதையும் செய்யவில்லை. அவர் தன் அரசியல் வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை மட்டும் வைத்துள்ளார். ஒன்று தனக்கு அதிகாரம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், எந்த நல்லதும் நடக்கக் கூடாது. அப்படி நடந்தால், அதை எப்படி கெடுப்பது என்று அவருடைய ஆன்மா அலைபாயும்.காங்கிரஸ் கட்சி ஒரு காலத்தில், 400க்கும் மேற்பட்ட எம்.பி.,க்களை வைத்திருந்தது. ஆனால், தற்போது, 275 தொகுதிகளில்கூட போட்டியிட முடியவில்லை. அதற்கு வேட்பாளர்களும் கிடைக்கவில்லை. லோக்சபாவில், பெரும்பான்மைக்கு, 272 தொகுதிகள் தேவை. அதனால், காங்கிரசுக்கு ஓட்டளிப்பது என்பது வீண்தான்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Rajarajan
மே 01, 2024 06:08

மூன்று தலைமுறையாக, ஒரே குடும்பமே இடவொதுக்கீட்டில் பயன்பெற்று, வேறு நலிந்த குடும்பத்தை மேலே வரவிடாமல் செய்கின்றனர் இதை எப்படி யார் தடுப்பர் ?? அதுசரி, உலகமயமாக்கலில் இந்தியா சேர்ந்தபின்னர், முக்கிய துறைகள் தவிர அனைத்தையும் தனியார் மயமாக்க, சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு கையெழுத்து போட்டுவிட்டு, பின்னர் எப்படி தனியார் நிறுவனங்களில் இடவொதுக்கீடு வரும் ?? இதை எந்த தனியார் நிறுவனம் ஒப்புக்கொள்ளும் ?? அதெல்லாம் இருக்கட்டும் நமது தமிழகத்தில் தொழில் நடத்தும் எந்த திராவிட அரசியல்வாதி, தனது நிறுவனத்தில் இடவொதுக்கீட்டை அமல்படுத்தியுள்ளார் ? எந்த திராவிட இயக்கத்தை சேர்ந்த தலைவர் / அரசியல்வாதி / ஆதரவாளர் / அடிப்பொடி , தனது வாரிசை கோவில் அர்ச்சகர் ஆக்கியுள்ளார் ?? அட திராவிட வீரமணியிடம் கேள்வி இங்கே, பதில் எங்கே ??


Dharmavaan
மே 01, 2024 06:41

ஐடா திக்கீடு எதனை தலைமுறைக்கு தொடர வேண்டும் பங்களாவில் வாழ்ந்து காரில் உ லாவருபவனுக்கு இட ஒதுக்கீடு தேவையா


மேலும் செய்திகள்