| ADDED : ஜூன் 04, 2024 04:36 AM
கடவுள்களில் மும்மூர்த்திகள் இருப்பது போன்று பார்வதி, லட்சுமி, சரஸ்வதி என்ற முப்பெரும் தேவியர் உள்ளனர். ஒரே இடத்தில் மூன்று பெண் தெய்வங்கள் அருள் பாலிப்பது அபூர்வம். இதுபோன்ற கோவில் உத்தரகன்னடாவில் உள்ளது.பொதுவாக உத்தரகன்னடா மாவட்டத்தின் பெயரை கேட்டால் கடற்கரைகள், ஆர்ப்பரிக்கும் அலைகள், சுற்றுலா தலங்கள், நீர் வீழ்ச்சிகள் நினைவுக்கு வரும். ஆனால், இங்கு கோவில்களுக்கும் பஞ்சம் இல்லை. வரலாற்று பிரசித்தி பெற்ற பல கோவில்கள் உள்ளன. இவற்றில் துர்கா பரமேஸ்வரி கோவில், மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.உத்தரகன்னடா குமட்டாவின் ஆந்திரவள்ளியில் உள்ள கோவிலின் பெயர் துர்கா பரமேஸ்வரி. ஆனால் உள்ளே மூன்று தேவதைகள் உள்ளனர். நடுவில் மஹா காளி, இடது புறம் மஹாலட்சுமி, வலது புறம் சரஸ்வதி குடி கொண்டுள்ளனர். தல வரலாற்றை புரட்டி பார்த்தால், இந்த கோவில், 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது தெரிகிறது.மூன்று தேவதைகளுக்கும் ஒரே நேரத்தில் பூஜைகள் நடக்கின்றன. மூன்று தேவதைகளை பூஜிக்கும், கர்நாடகாவின் ஒரே கோவில். கோவிலில் 16 அடி உயரமான பெரிய புற்று உள்ளது. இந்த புற்றில் தேவியின் அம்சமாக கருதப்படும் நாகம் உள்ளது. நாகம் ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே, கண்களில் தென்படுமாம். தேவியருக்கு பூஜைகள் நடப்பது போன்று, புற்றுக்கும் பூஜை, புனஸ்காரங்கள் நடக்கின்றன.சிர்சி வழியாக குமட்டாவுக்கு வந்தால், கோவிலை அடையலாம். கதகாலுக்கு வந்து அங்கிருந்து பஸ்சில் துர்கா பரமேஸ்வரி கோவிலை தரிசிக்கலாம். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கோவிலுக்கு பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர்.- நமது நிருபர் -